யாழ் போதனாவைத்தியசாலையில் நகைகளைத் திருடும் திருடியின் முழு விபரங்கள் இதோ!! (Video)

யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளர்களின் பணம், கைப்பை மற்றும் தங்க நகைகள் என்பன நூதனமான முறையில் திருடப்படுவதாக தினமும் முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமே இருக்கின்றன.

எனவே வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெறும் களவுகள் தொடர்பாக வைத்தியசாலைக்கு வரும் அனைத்து நோயாளர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் பொது மக்கள் விழிப்பாக
இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். என வைத்தியசாலை நிர்வாகம் சார்பாக கோரிக்கை ஒன்று விடப்பட்டுள்ளது.
CCTV காட்சிகளில் பதிவான திருடி

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த 03-12-2018ம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையின் விடுதி ஒன்றிற்குள் நோயாளர் போல் 01 மாதமான குழந்தையுடன் உள் நுழைந்த பெண்ணொருவர் நூதனமான முறையில் வயோதிபப் பெண்ணொருவரின் தோட்டினை கழட்டி சென்றுள்ளார்.

பின்னர் மறுநாளும் (04-12-2018ம் திகதி) அதே பாவனையுடன் விடுதிக்கு உள்நுழையும் போது அங்கு நின்ற நோயாளர்களின் உதவியாளர்களினால் இவர் அடையாளம் காணப்பட்டு, விடுதி உத்தியோகத்தர்கள் மூலம் இப்பெண்மணியானவர் பணிப்பாளர் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

அப்போது குறித்த பெண்மணி தான் கொடிகாமம் வெள்ளாந்தெருவினை சேர்ந்தவர் எனவும், தற்போது முள்ளியவளையில் வசிப்பதாகவும் தானே மேற்படி தோட்டினை கழட்டி யாழ் நகர கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக்கடையொன்றில் விற்று 17000 ரூபாவினை பெற்றதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இவ்வைத்தியசாலையில் தான் கிட்டத்தட்ட 15 தடவைகளுக்கு மேல் ஒரு குழுவினருடன் வந்து பணம், கைப்பை மற்றும் தங்க நகைகள் களவாடியதாகவும், இவற்றில் 05 களவுகளை தானே செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் தோட்டினை களவு கொடுத்தவர்களையும் குறித்த குழந்தையுடனான பெண்ணும் வைத்தியசாலை பொலிசார் ஊடாக யாழ்ப்பாணப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

எனினும் இவ்விடயம் தொடர்பாக பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பாக தெரிவிக்கப்படவில்லை.

மேலும் தோட்டினை களவு கொடுத்தவர்களுக்கு குறித்த தோடானது குறித்த நகைக்கடையில் மீளப் பெற்று பொலிசாரினால் உரியவர்களிற்கு வழங்கப்பட்டதாகவும் அறியமுடிந்துள்ளது.

மேலும் இவருடன் தொடர்புடைய களவு செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களென இப்பெண்மணியினால் கூறப்பட்டவர்களின் விபரங்களும் பொலிசாரிடம் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை இதனைத் தொடர்ந்து கடந்த 28-12-2018ம் திகதி வெள்ளிக்கிழமை குறித்த பெண்மணி அதே குழந்தையுடன் மீண்டும் கிளினிக் பகுதிக்கு வந்து மிகவும் வயது முதிர்ந்த 92 வயது மூதாட்டியினை நூதனமாக அழைத்து சென்று அவருடன் கதைத்த வண்ணம் அவரது தங்கச்சங்கிலியினை கழட்டி தப்பிச்சென்றுள்ளார்.

இக்களவு செய்யப்பட்ட காட்சியானது வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள CCTV கமராவில் பதியப்பட்ட காட்சியானது களவு கொடுத்தவர்களுக்கும் யாழ் பொலிசாரிற்கும் அன்றைய தினமே வளங்கப்பட்டுள்ளது.

இப்பெண்மணி மற்றும் அவரை போன்ற ஏனைய திருடர்கள் தொடர்பாகவும், யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருகை தரும் அனைத்து நோயாளர்களையும் பொதுமக்களையும் விழிப்பாகவும் அவதானமாகவும் இருக்குமாறு யாழ்போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.