மீ்ண்டும் கொள்ளையர்கள்!! குடாநாட்டு மக்கள் கடும் அச்சத்தில்

வலிகாமம், தென்மராட்சிப் பகுதிகளில் மட்டும் கடந்த இரு நாட்களுக்குள் பத்துக்கும் மேற்பட்ட கொள்ளைகள், வழிப்பறிகள் நடைபெற்றுள்ளதாக பொலிசாரிடம் பொதுமக்கள் முறையிட்டுள்ளனர்.

நேற்று மட்டும் வலிகாமம் பகுதிகளில் பல கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள.

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னாலை சுப்பிரமணியம் முருகன் கோயில் அருகில் உள்ள வீட்டுக்குள் சனிக்கிழமை (16) இரவு நுழைந்த 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல், வீட்டில் உள்ள அனைவரையும் கத்தி முனையில் அச்சுறுத்தி 5 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் வீட்டு கதவை உடைத்து உள்நுழைந்துள்ளனர்.

இதன்போது,வீட்டில் உள்ளவர்கள் சத்தம் போடவே, கத்தியை கழுத்தில் வைத்து அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இளவாலை, வடலியடைப்பு பகுதியில், சைக்கிளில் சென்ற இரு பெண்களை தாக்கி 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான 7 பவுண் தாலி கொடியை அபகரித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் சீசீரீ கமராவில் பதிவாகியுள்ள NP-BCK-1879 இலக்கம் கொண்ட மோட்டார் சைக்கிள் தொடர்பில் தகவல் தருவர்களுக்கு பெறுமதியான பணப்பரிசு வழங்கப்படும் என இளவாலை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர்கள்,அவ்வழியே வந்த  இரு பெண்களை தாக்கி தாலி கொடியை அறுத்தெடுத்து சென்றுள்ளனர். இச்சம்பவம், கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் உள்ள வீடு ஒன்றின் முன் பொருத்தியிருந்த சீசீரீ கமராவில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் நகையை பறிகொடுத்த பெண்கள், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேற்படி இலக்கம் கொண்ட மோட்டார் சைக்கிள், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் பதிவு செய்திருக்கவில்லை எனவும் போலி இலக்கத்தகடுகளை பொறுத்தி , கொள்ளைச்சம்பவங்களுக்கு பயன்படுத்தி வருவதாகவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

மேற்படி இலக்கத்தினை கொண்ட மோட்டார் சைக்கிளை காண்பவர்கள், இது தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கமான 021- 221 1922, அல்லது பொறுப்பதிகாரியின் தொலைபேசி இலக்கமான 077-7553150 எனும் இலக்கத்துக்கு தெரிவிக்க முடியும்.