சினிமாவில் கஷ்டங்களை சந்தித்து முன்னேறினேன்: கங்கனா ரனாவத் பேச்சு

தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக நடித்தவர் கங்கனா ரனாவத். இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ‘குயீன்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கங்கனா ரனாவத் கலந்து கொண்டு பரபரப்பாக பேசினார். அவர் கூறியதாவது:-

நான் சினிமாவில் இப்போது முன்னணி நடிகையாக இருக்கிறேன். என் வளர்ச்சி மட்டும்தான் எல்லோருக்கும் தெரிகிறது. இந்த இடத்துக்கு வருவதற்கு நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம். 10 வருடங்களாக போராடினேன். அவமானங்களை சந்தித்தேன். புறக்கணிக்கப்பட்டேன். சங்கடப்படுத்தினார்கள். உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டேன்.

இவை என்னை மனதளவில் பக்குவப்படுத்தின. நமக்கு வெற்றி எதையும் கொடுத்து விடாது. தோல்விகள் பாடம் கற்று தரும். தோல்விகளும் கஷ்டங்களும் எனக்கு முன்னேற வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்தன. நம்பிக்கை ஊட்டின. அதன் காரணமாக அவற்றில் இருந்து இப்போது மீண்டு வந்து இருக்கிறேன்.எல்லோருமே வெற்றி தோல்வியை சந்திக்கிறோம். எதுவும் இறுதியானது அல்ல என்பதை உணர வேண்டும். குழந்தைகளுக்கு தோல்வியை சந்திக்கும் மனப்பக்குவத்தை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நடக்கின்றன. எனது சகோதரி மீது கூட திராவக வீச்சு நடந்தது. பெண்களால் நிராகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஆண்களுக்கு வரவேண்டும். அதை ஏற்றுக்கொள்ளாதபோதுதான் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள். என் வாழ்க்கையை புத்தகமாக எழுத முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு கங்கனா ரனாவத் கூறினார்.