யாழ். கொக்குவிலில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை களமிறக்கம்!

யாழ்.கொக்குவில் பகுதியில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு துப்பாக்கி ஏந்திய விசேட அதிரடிப்படையினர் காவல் கடமை மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.குடாநாட்டில் அண்மைக் காலமாக வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகளவில் கொக்குவில் பகுதியிலேயே இடம்பெறுகின்றன.

கடந்த வார இறுதியிலும் கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடாத்தியிருந்தனர்.

இந்த நிலையில் வாள்வெட்டுச் சம்பவங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முகமாக நேற்று முதல்(07) குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.