முல்லைத்தீவில் வாள் வெட்டு, துப்பாக்கிச் சூடு! இதுவரை நால்வர் கைது

புதுக்குடியிருப்பு - கைவேலி, மருதங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

கடந்த 11ஆம் திகதி இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாய், தந்தை, மகன் ஆகியோர் மீது வாள்வெட்டு கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட வைத்தியசாலையிலும், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதன்போது வாள்வெட்டு குழுவின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் சூட்டுக்காயங்களுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது வாள்வெட்டு கும்பலை சேர்ந்த காயமடைந்த நபர் உள்ளிட்ட நால்வரை கைது செய்துள்ளனர

அனைவரும் 20 - 24 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள

கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தோடு இரண்டு வாள்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கி, வாள்வெட்டு கும்பல் பயன்படுத்திய தடயப் பொருட்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.