நல்லூர் ஆலயத்தில் நீதிபதி ஒருவருக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞன்!

மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் கையடக்கத் தொலைபேசியை திருடியதாக சந்தேகிக்கப்படும் இளைஞன், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வைத்து திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் இறுதி திருவிழாவான தீர்த்த திருவிழா நேற்று மாலை நடைபெற்றது.

இதன்போது, மல்லாகம் நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் நல்லூர் ஆலயத்திற்குச் சென்றுள்ளனர். பூசை வழிபாட்டினை நிறைவு செய்த காருக்கு திரும்பிய வேளையில் தொலைபேசி காணாமல் போனமை தெரியவந்துள்ளது.

நீதிபதி உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். காரின் கண்ணாடியை உடைத்தே திருட்டு இடம்பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம், கந்தசுவாமி ஆலய வளாகத்தில் நின்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை யாழ்.நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.