அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய போராட்டத்தை புறக்கணித்த கூட்டமைப்பு

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று இடம்பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புறக்கணித்துள்ளனர்.

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 12 பேர் தம்மை விடுவிக்குமாறும், தம்மீதான வழக்குகளை துரிதப்படுத்துமாறும் கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகம் அருகாமையில் இன்று சத்தியாகிரகப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இப்போராட்டத்தில் அரசியல் கைதிகளின் நிலையினை கருத்தில் கொண்டு இன, மத பேதமின்றி பல்வேறு அரசியல் கட்சிகளும், பொது அமைப்புக்களும் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தனர

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ரெலோ, புளொட், தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் என எவரும் இதில் கலந்து கொள்ளவில்லை.

இதேவேளை, இது தொடர்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைகலநாதன் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.