யாழில் ஐந்து நட்சத்திர விடுதிக்கு முன் சிவனுக்கு இடமில்லை

யாழ். காரைநகரின் நுழைவாயிலில் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ள காரைநகர் பிரதேசசபை, அதற்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சிவன் சிலை அமைப்பதற்கான வேலைகளை தடுத்து நிறுத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

அந்த வகையில் யாழ். காரைநகர் புனித மண்ணில் சிவன் சிலை அமைப்பதற்கான வேலைகளை காரைநகர் பிரதேச சபையின் உப தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் பொலிஸாரின் உதவியுடன் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. 

காரைநகர் நுழைவாயிலில், காரைநகர் சைவ மகாசபையால் சிவபெருமானின் பாரிய சிலை ஒன்றை அமைப்பதற்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கான வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

நேற்று வேலைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, அங்கு சென்ற காரைநகர் பிரதேசசபை உப தவிசாளர் பாலச்சந்திரன், வேலைகளை நிறுத்துமாறும் இல்லையேல் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டி ஏற்படும் எனவும் தெரிவித்ததாக அங்கு நின்ற சைவ மகாசபையின் உறுப்பினர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பொலிஸாரை வரவழைத்து அவர்கள் மூலம் இந்த வேலைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த நிலையில், காரைநகர் நுழைவாயிலில் குறித்த சிவன் ஆலயம் அமையவுள்ள காணிக்கு எதிர் திசையில் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றை அமைப்பதற்கு பிரதேச சபை அனுமதி வழங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் அனுமதி இன்றி இந்த விடுதி அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இந்த நிலையில் ஆன்மீகப் பெருமை பேசும் யாழ். காரைநகர் மண்ணில், ஐந்து நட்சத்திர விடுதி அமைப்பதற்கு தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ள பிரதேசசபை, சிவன் சிலை அமைப்பதற்கான பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளமை தொடர்பாக காரைநகர் மக்களில் பலர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.