தமிழினம் வாழ்ந்த அறிகுறிகள் கூட தென்படாத வகையில் இலங்கையில் சரித்திரங்கள் மாற்றி எழுதப்படுகின்றது

தமிழர்கள் என்ற ஒரு இனம் இலங்கையில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கூட தென்படாத வகையில் சரித்திரங்கள் மாற்றி எழுதப்படுவதாக வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரங்கள், பண்பாடுகள் மற்றும் அவர்களின் கலைப்படைப்புக்கள் ஆகியன பெருமளவில் ஆவணப்படுத்தப்படாத காரணங்களினால் ஏனையவர்கள் தமது கலை நயம் பற்றியும், தமது இருப்புக்கள் பற்றியும் பல்வேறு தகவல்களை வசதிக்கேற்றவாறு மாற்றி மாற்றி புதிய வரலாறுகளை உட்புகுத்துகின்றனர்.

இதன் மூலம் தமிழர்கள் என்ற ஒரு இனம் இலங்கையில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கூட தென்படாத வகையில் சரித்திரங்கள் மாற்றி எழுதப்படுகின்றன.

இவற்றையெல்லாம் எமது பூர்வீக சரித்திர ஆராய்ச்சியாளர்களும், தொல்பொருள் நிபுணர்களும் மற்றும் இன்னோரன்ன ஆய்வாளர்களும் மறுத்துவருவதோடு தமிழர்களின் அருமை பெருமைகள் பற்றி ஆராய்ச்சிகள் மூலம் கருத்துக்களும் வெளியிட்டு வருகின்றார்கள்.

ஆனால் அவை பொதுமக்களை நேரடியாகச் சென்றடைவதில் தாமதங்களும் நெருக்கடிகளும் உருவாவதை நாம் அவதானித்திருக்கின்றோம்.

எனவே எமது படைப்புக்கள், எமது பூர்வீகங்கள், சரித்திரங்கள், எமது கடந்தகால எச்சங்கள் ஆகிய அனைத்து பற்றியும் நூல் வடிவில் படைப்புக்களாகக் கொண்டு வந்து அவை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அப்போதுதான் எமது மக்கள் கிறீஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே இப் பகுதிகளில் ஒரு நாகரீகம் அடைந்த சமூகமாக வாழ்ந்து வந்தார்கள் என்பது எமது மக்களுக்குத் தெரிய வரும்.

வரலாற்றுச் சான்றுகள் எமது தொன்மை பற்றி எடுத்துக் கூறுகின்ற போதும் அவற்றை உள்ளடக்கிய வரலாற்று ஆவணங்கள் எமது கைகளில் கிடைக்கப் பெறாமையால் அவற்றை உறுதிப்படுத்துவதில் சில பல சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன.

செம்மொழி அந்தஸ்தைப் பெற்ற எமது மொழி இயல், இசை, நாடக துறைகளில் மேலான பங்களிப்பை செய்கின்ற ஒரு மூத்த மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட போதும் எம்மவர்கள் தமிழ் மொழியில் பேசுவதோ அல்லது தமிழ்மொழி மூல கற்கைநெறிகளை மேற்கொள்வதற்கு கொடுக்கின்ற முக்கியத்துவமோ திருப்திகரமானதாக இல்லை.

தமிழ் மொழியின் இலக்கியச் சுவையை, உச்சரிப்பு நேர்த்தியை மற்றும் எமது மொழியில் தவழ்ந்து விளையாடும் கலைநயங்களை நாம் உண்மையிலேயே அனுபவிக்க வேண்டுமெனில் நாட் கணக்காக மேடை போட்டு அமர்ந்திருந்து தமிழ் மொழிப் பேச்சுக்களை, நாடகங்களை, இசைக் கச்சேரிகளை நடாத்தி தமிழ் மொழியின் தனிச்சிறப்பை அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் தற்போது பல்வேறு வேற்று கலை கலாசாரங்களினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது உண்மை. உதாரணத்திற்கு “பைலா” எனப்படும் இசையோடு இணைந்த நாட்டியமானது எமக்கு போத்துக்கீசரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

மட்டக்களப்பில் தமிழ்ப் பேசும் போத்துக்கீசரின் வழி வந்தவர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள். இன்று வட கிழக்கை இணைக்க மறுத்து இடையில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

வலிஓயா இப்போது கியூல் ஓயா என்று வடகிழக்கு மாகாணங்களுக்கு இடைப்பட்ட இதுகாறும் தமிழ்ப் பெயர்களைக் கொண்டிருந்த நிலங்கள் பெயர்மாறி வருகின்றன.

காலக்கிரமத்தில் அவர்களின் கலை, கலாச்சாரங்கள் எம்மவரின் வாழ்க்கையில் உள்நுழைவன. எமது தனித்துவம் பறி போய்விடுவன.

முல்லைத்தீவு,வவுனியாக் காணிகள் பறி போவதை நாம் எதிர்த்து வருகின்றோம். எமது சுற்றாடல்களைப் பாதுகாப்பதும் எமது கலாச்சாரத்தின் ஒரு அங்கமே என்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.