யாழில் நடந்த துணிகர சம்பவம்! ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று காலை 6 மணியளவில் கல்வியங்காட்டுப் பகுதியிலுள்ள 3 வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றசாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்வியங்காட்டு பகுதியில் உள்ள மூன்று வீடுகளுக்குள் நேற்றுப் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் மூவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், வீடுகளிலுள்ள பொருள்களையும் சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது.

இச்சம்பவத்தின்போது ஒரு வீட்டில் குடும்பப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், மற்றொரு வீட்டில் தந்தை மற்றும் மகன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

கல்வியங்காடு ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த 70 வயதுடைய வேலுப்பிள்ளை செல்வராசா, 25 வயதுடைய செல்வராசா சஜீபன் மற்றும் 61 வயதுடைய பாலேந்திரன் சரோஜினிதேவி ஆகிய மூவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.