விக்னேஸ்வரன் நல்லவர்: ரெஜினோல்ட் குரே

வட.மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஒரு இனவாதி அல்லர் என வட.மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்புவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“வட.மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இனவாதி அல்லர். அதனால்தான் அவரது புதல்வர்களை கொழும்பு பக்கத்தில் புத்தமதம் சார்ந்த சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார்.

பௌத்த விகாரைக்குள் இந்து தெய்வங்கள் புத்த பெருமானோடு சந்தோசமாக சாந்தியும் சமாதானமுமாக இருக்கின்றபோது புத்தரை வணங்கச் செல்லும் மக்கள் சண்டை பிடிக்கின்றார்கள்.

இச்செயலை பார்த்து தெய்வம் சிரிக்கின்றது. தெய்வத்திடமிருக்கும் நல்லவை ஏன் மனிதனிடம் இருக்கக்கூடாது? மக்கள் மத்தியில் விரைவாகத் தலைவராக வருவதற்கு சுலபமான வழி இருக்கின்றது.

அதுதான் இனவாதம், மொழிவாதம், குலவாதம் பேசுவது. குறுகிய காலத்திற்குள் தலைவராவதற்கு வேறு ஒன்றும் தேவையில்லை, தேர்தல் காலம் நெருங்கும்போது இனவாதம், மொழிவாதம், குலவாதம் பேசுகிறார்கள். அவை தேர்தல் காலத்தில் மட்டுமேதான் இருக்கும்.

மதங்கள், இனங்களுக்கு மத்தியில் மனிதத் தன்மையை மேலே வைத்து நாம் அனைவரும் மனிதனாக வாழ வேண்டும். அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலை நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் எதிர்கால சந்ததிக்காக சிந்திக்க வேண்டும். இதுவே எனது வேண்டுகோள்” என அவர் மேலும் தெரிவித்தார்.