விஜய் சேதுபதி பற்றி அருண் விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்ததன் மூலம் சிம்பு பற்றி ஒரு விஷயம் தெரிந்து கொண்டதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார். 

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படம் வரும் 28ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் நேற்று இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

விழாவில் பேசிய அருண் விஜய் கூறியதாவது:

செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தது ஒரு புதுமையான அனுபவம். தினமும் ஒரு புது விஷயத்தை கற்றுக் கொண்டேன். மணிரத்னம் படத்தில் நடிக்கிறேன் என்றதும் சந்தோஷமாக இருந்தது. அதே சமயம் டென்ஷனாகவும் இருந்தது. ஆனால் மணி சாரை பார்த்ததும் அந்த டென்ஷன் போய்விட்டது. டென்ஷன் போனாலும் ஒருவித பயம் இருந்து கொண்டே இருந்தது. என் பயத்தை போக்கியது வேறு யாரும் அல்ல நம் அரவிந்த்சாமி தான். 


எனக்கு தியாகு கதாபாத்திரம் அளித்த மணி சாருக்கு இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மணி சாரை பற்றி நினைத்தது வேறு நடந்தது வேறு. கேமராவுக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஆக்ஷன் என்று சொல்லும் இயக்குனராக மணி சார் இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவரோ என் அருகில் வந்து எதை எப்படி செய்ய வேண்டும் என்று பொறுமையாக விளக்கி நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தார். 

சிம்பு சிம்பு திறமையான நடிகர். அவரை சின்ன வயதில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். இருப்பினும் இந்த படத்தில் சேர்ந்து நடித்ததன் மூலம் அவரை பற்றி ஒரு விஷயம் தெரிந்து கொண்டேன். அவர் நல்ல மனிதர் என்பதை தெரிந்து கொண்டேன். 

விஜய் சேதுபதி நிஜத்திலும் சரி, நடிப்பிலும் சரி மிகவும் யதார்த்தமானவர். அவர் எப்பொழுதும் இப்படியே இருக்க வேணடும் என்பதே என் கோரிக்கை என்றார் அருண் விஜய்.

எதிர்பார்ப்பு ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் செக்கச் சிவந்த வானம் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படம் பற்றி எந்த தகவலும் கசிந்துவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் மணிரத்னம். அதனாலேயே படம் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகரித்துள்ளது. நட்சத்திர பட்டாளத்தை கையாள்வது மணிரத்னத்திற்கு கை வந்த கலை என்பது குறிப்பிடத்தக்கது.