மலையாளபுரம் பகுதியில் கேரள கஞ்சா மீட்பு

கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியில், மாவட்ட சட்டவிரோத மது ஒழிப்புப் பிரிவினரால் ஒரு தொகை கஞ்சா பொதிகள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன.

பிரதேச மக்கள் வழங்கிய விசேட தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் இருந்து குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் ஒரு கிலோ அளவிலான கஞ்சா இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனம் ஒன்று செல்வதை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் வாகனத்தை பின்தொடர்ந்துச் சென்று அவதானித்துள்ளனர்.

இந்நிலையில், குறுக்கு வீதிகள் ஊடாக வேகமாக பயணித்த குறித்த வாகனம் வழி தவறி குளப் பாதை ஒன்றினுள் சென்று மீளத் திரும்ப முடியாமையினால், வாகனத்தில் இருந்து சில பொதிகளை வீசிச்சென்று வாகனத்தையும் விட்டுத்தப்பிச்சென்றுள்ளனர். 

அதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் குறித்த பொதிகளில் கஞ்சா இருப்பதை அறிந்து கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் சட்டவிரோத மது ஒழிப்புப் பிரிவு விசேட குழுவினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கஞ்சா பொதிகளை கைப்பற்றியதோடு வாகனத்தையும் கைப்பற்றி பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுச் சென்றுள்ளனர்.