யாழில் மீண்டும் அட்டகாசத்தை ஆரம்பித்த வாள்வெட்டுக் குழு! மூவர் படுகாயம் -

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் மூவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிள்கள மற்றும் பாரியளவான பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்களுடன் சென்ற ஆவா குழுவினரே இந்த நாசகார செயலை செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இரண்டு வீடுகள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் 70 வயதான முதியவர், 25 வயதான இளைஞன் மற்றும் 61 வயதுடைய பெண்மணியொருவரே படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதும், அவ்வப்போது இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்பட்டவண்ணமே உள்ளன. குறிப்பாக, குப்பிளான் பகுதியில் நேற்று வாள்வெட்டுக் கும்பல் வீடொன்றை சேதப்படுத்திச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.