யாழ். மாநகர சபையிலும் ஊழல் மோசடிகள்: மேயர் எடுத்துள்ள நடவடிக்கை

யாழ்ப்பாணம் மாநகர சபை இலஞ்ச ஊழல் விசாரணைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் இ.ஆனோல்ட் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 6ஆவது அமர்வு மேயர் இ.ஆனோல்ட் தலைமையில் நடைபெற்றது.

அதில் யாழ். மாநகர சபையின் சபை பொறுப்பேற்கப்பட்ட பின்னர் நடைபெற்ற ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பட்டியல் யாழ்ப்பாணம் மாநகர சபை இலஞ்ச ஊழல் விசாரணைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டது.

இலஞ்ச ஊழல் விசாரணைக் குழுவின் தலைவர் ராஜீவ்காந்தால் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டதுடன், தொடர் நடவடிக்கைக்கு பரிந்துரைக்குமாறும் வலியுறுத்தினார்.

அதை ஆராய்ந்த மேயர் அனைத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

முறையற்ற ஆளணி நியமனம், இலஞ்சம் பெற்றமை, சட்டவிரோத இறைச்சி விற்பனை, முறையற்ற களஞ்சியப் பதிவுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பட்டியலிடப்பட்டன.

நல்லூர் ஆலய திருவிழாக் காலங்களுக்காக சபை அனுமதியுடன் தற்காலிக தொழிலாளர்கள் 40 பேர் மாநகர சபையில் உள்ள தொழிலாளர் சங்கத்தால் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களின் 12 பேரிடம் சிறு தொகை பணம் பெறப்பட்டே அந்த சங்கத்தால் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

அந்த 12 பேரிடமும் மாநகர சபையின் தொழிற் சங்கம் பகுதி பகுதியாக 42 ஆயிரம் ரூபாவை நியமனம் பெற்றுக் கொடுத்தமைக்காக இலஞ்சமாக பெற்றுள்ளனர்.

அந்த 12 பேரும் மாநகர பிரதி மேஜர் ஈசன் முன்னிலையில் இதை எழுத்து மூலமாக இலஞ்ச ஊழல் குழுவிடம் ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டுள்ளனர்.

மாநகரசபையின் களஞ்சியத்தில் உள்ள பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கண்டாவளை மண்ணின் அளவுக்கும் அதிகமாக 12 உழவு இயந்திர கண்டாவளை மண் மேலதிகமாக காணப்படுகின்றது.

அங்குள்ள இரும்பு குழாய் (பொக்ஸ் பார்) களஞ்சிய இருப்பில் இருந்து 24 குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும். குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பாரபட்சம் இன்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மேயர் தெரிவித்தார்.