தமிழக அரசே விடுதலை செய்; சோபியாவுக்காக குரல் கொடுத்த பா.ராஞ்சித்

பாஜக ஆட்சியை விமர்சித்ததற்காக தூத்துக்குடி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட சோபியாவை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

நெல்லை மாவட்டம் தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அதே விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த சோபியா என்ற பெண் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று பாஜக-வை விமர்சித்து கோஷமிட்டுள்ளார். இதனையடுத்து இதுகுறித்து தமிழிசை போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் சோபியா கைது செய்யப்பட்டார்.

சோபியா கைது செய்யப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து இயக்குநர்  பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஜனநாயகத்தின் குரல் சோபியா. தமிழக அரசே விடுதலை செய் என்று கூறியுள்ளார்.  மேலும் சோபியா எழுப்பிய பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்ற அதே கோஷத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.