சண்டைக்கு ஆயத்தமான நிலையில் யாழில் 3 காவாலிகள் கைது!!

யாழ்.திருநெல்வேலியில் குழு மோதலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று(26) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ். திருநெல்வேலி சிவன்- அம்மன் கோயிலடிப் பகுதியில் பொல்லுகள் சகிதம் இரு இளைஞர் குழுக்கள் மோதிக் கொள்வதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து விரைவாகச் செயற்பட்ட பொலிஸார் குறித்த பகுதியைச் சுற்றிவளைத்துள்ளனர்.

பொலிஸாரைக் கண்டதும் இளைஞர்கள் பலர் தமது மோட்டார்ச் சைக்கிள்களையும் கைவிட்டுத் தலைதெறிக்க ஓடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் விரட்டிச் சென்ற பொலிஸார் குழு மோதலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை மடக்கிப் பிடித்தனர்.

இதேவேளை, மேற்படி பகுதியில் குழு மோதலில் ஈடுபட்டிருந்தவர்கள் அதிக போதையில் இருந்துள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாகவும் எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.