தடுக்கும் உரித்து எவருக்கும் கிடையாது! யாழ். மாநகரசபை மேயர்!

எமக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூருகின்ற நிகழ்வுகளைத் தடுக்கும் உரித்து வேறு எவருக்கும் கிடையாது என யாழ். மாநகரசபை மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,

1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி எமது மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் - அஹிம்சா ரீதியான போராட்டத்தில் உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் நிகழ்வுகளை யாழ். மாநகரசபை பொறுப்பேற்று நடத்தும் என யாழ். மாநகரசபை சார்பில் நாங்கள் அறிவித்திருந்தோம்.

இந்த நிலையில், நிகழ்வுக்கு தடையுத்தரவு கோரியும், இப்போதான அஞ்சலி நிகழ்வுகளை இடைநிறுத்த கோரியும் யாழ். மாநகர ஆணையாளரின் பெயர் குறிப்பிடப்பட்டு, யாழ். பொலிஸாரின் ஊடாக மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நான் அறிகின்றேன்.

யாழ். மாநகரசபையின் முதன்மை நிறைவேற்று மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இவ்வழக்கானது யாழ். மாநகர முதல்வரின் பெயர் குறிப்பிட்டே தொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அரச உயர் அதிகாரி மீது இவ்வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதானது அரச நிர்வாக இயந்திரத்தைப் பயன்படுத்தி எமது மக்களின் அபிலாஷைகளை முடக்குவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற சதி முயற்சியாகவே எண்ண தோன்றுகின்றது.

நாம் மக்கள் பிரதிநிதிகள், நம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற மக்களால் ஜனநாயக தேர்தல்களினூடாக தேர்வு செய்யப்பட்டவர்கள். நாம் மக்களுக்காக குரல் கொடுக்க வந்தவர்கள்.

எனவே, மக்களோடு தொடர்புள்ள நிகழ்வொன்று தொடர்பில் யாழ். மாநகரசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளும், நிறைவேற்று அதிகாரப் பிரதிநிதியாக, யாழ். மாநகர முதல்வராக நானும் இருக்கின்ற போது இந்த விடயங்களுக்குப் பொறுப்பு கூறும்படி அரச அதிகாரிகளைப் பணிப்பது சட்டபூர்வமானதா என்றும் சிந்திக்க தூண்டுகின்றது.

எனவே, நினைவு நாள் ஏற்பாடுகள் யாழ். மாநகரசபை மக்களின் விருப்பை அடிப்படையாக கொண்டு முழுமையான அர்ப்பணிப்போடு செயற்படும் என்றும், இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் நடைமுறையில் இருக்கும் சட்ட யாப்புக்கு அமைவாகவும் நீதிமன்ற நடைமுறைகளை மதித்தும் சட்டரீதியாக இந்த விவகாரங்களை கையாள்வதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம் என்பதையும் மக்களுக்கு அறியத் தருகின்றோம்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றிலே இந்த வழக்கு தொடர்பில் யாழ். மாநகரசபை சார்பில் நாம் ஆஜராகுவதோடு எமது முழுமையான கவனத்தையும் செலுத்துவோம். எமது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகிய எமக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூருகின்ற நிகழ்வுகளை தடுக்கும் உரித்து வேறு எவருக்கும் கிடையாது.

எமது மக்களின் விடுதலை வேண்டிய உணர்வுகளை சட்டத்தை கொண்டு அல்லது அதிகாரத்தை கொண்டு மழுங்கடிக்க முடியாது என்பதை மிக வெளிப்படையாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

சர்வதேச சட்ட நியமங்களினாலும், ஒப்பந்தங்களினாலும், ஜெனிவா பிரகடனம், நல்லிணக்க உரிமைகளை நிலை நிறுத்தும் முழுமையான சூழ்நிலையினை நிலைநிறுத்துவதற்கும் நாம் அர்ப்பணிப்போடு செயற்படுவோம்.

தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் எவ்வித மாற்றங்களும் இன்றி நாம் எண்ணியிருந்த அமைப்பிலே இடம்பெறுவதற்கு நாம் முழுமையான உறுதியோடு முன் நகர்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.