வான்வழியாக இணைகின்றன தமிழ்நாடும் யாழ்ப்பாணமும்!

எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு நேரடி விமான சேவை ஆரம்பிகப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்தே இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுதொடர்பில் தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்துக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் வகையில் மூன்று அமைச்சுக்கள் ஊடாக அமைச்சரவை அனுமதி பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியன இணைந்து இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை, சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளன என்று போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக ஆரம்பித்து, பின்னர் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தி வெளிநாடுகளுக்கான விமான சேவைகளை நடத்துவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகம் மற்றும் சுங்கத் திணைக்களம் என்பவற்றை நிறுவுவது தொடர்பான திட்டத்தை சிவில் விமான சேவைகள் அதிகார சபை வரைகின்றது.

விமான நிலையத்தை புதுப்பிக்கும் பணிகளுக்காக 1.2 பில்லியன் ரூபா தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் மறுசீரமைப்புப் பணிகள் இலங்கை விமானப் படையிடம் கையளிக்கப்படவுள்ளது என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

வலி.வடக்கில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பலாலி விமான நிலையம் அமைந்துள்ள நிலையில், 750 ஏக்கர் நிலமே அதன் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படவுள்ளது என்றும் எஞ்சியுள்ள 250 ஏக்கர் காணி விடுவிக்கப்படலாம் என்றும் யாழ். மாவட்ட செயலக காணிக்குப் பொறுப்பான மேலதிக அரச அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார்.

”விமானப் படையின் உள்ளீடுகளுடன் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தால் முதலீட்டுக்கு ஏற்ப குறைந்தபட்ச வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆரம்பத்தில் விமான நிலையமானது ஏ320, ஏ321, பி737 வகை விமானம் போன்ற குறைந்தபட்ச இரண்டு நடுத்தர வர்த்தக ஜெட் விமானங்களைக் கையாள மேம்படுத்த முடியும். இந்த வகை விமானங்களில் 150 தொடக்கம் 180 பயணிகள் பயணிக்க முடியும்” என்று சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கான பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் இந்திய அதிகாரிகள் மூவர், கடந்த வாரம் ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.