யாழில் வர்த்தகரின் சாதுரியத்தால் பாரிய திருட்டு முறியடிப்பு

வர்த்தக நிலையமொன்றில் இடம்பெறவிருந்த பாரிய திருட்டு முயற்சி குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரின் புத்திசாதுரியத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் யாழ். வடமராட்சி மந்திகைப் பகுதியில் நேற்றுச் சனிக்கிழமை(18) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மேற்படி பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தின் ஓடு பிரித்து இறங்குவதற்குத் திருடன் முயற்சித்துள்ளான். இந்த நிலையில் குறித்த வர்த்தக நிலையத்திற்குள் உறங்கிக் கொண்டிருந்த வர்த்தக நிலைய உரிமையாளர் சத்தம் கேட்டுத் திடீரென விழித்துள்ளார்.

இதனையடுத்து அயலிலிருந்தவர்களுக்கு அவர் தொலைபேசியூடாக உடனடியாகத் தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து ஓடு பிரித்து இறங்குவதற்கு முயற்சித்த திருடன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். இந்நிலையில் குறித்த வர்த்தக நிலையத்தின் பின்புறமாகவுள்ள காணியொன்றிலிருந்து திருடுவதற்காகப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் மோட்டார்ச் சைக்கிளொன்று பருத்தித்துறைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் அவர்கள் தீவிர விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.