என் ஆதரவு பீட்டாவுக்கு அல்ல; ஜல்லிக்கட்டுக்குத் தான்- தனுஷ்

ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்நிலையில், இதற்கு முக்கிய காரணமாக விளங்கும் பீட்டா அமைப்புக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பீட்டா அமைப்பின் தூதர்களான நடிகைகள் திரிஷாவுக்கும் ஏமி ஜாக்சனுக்கும் எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், தனுஷும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார் என்றும், பீட்டா அமைப்பின் தூதராக செயல்படுகிறார் என்றும் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து பலரும் தனுஷுக்கு எதிராக கருத்து தெரிவித்தார்கள். இதற்கு தனுஷ் பதலளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு குறித்து தனுஷ் கூறும்போது, "ஜல்லிக்கட்டை நான் ஆதரிக்கிறேன். ஜல்லிக்கட்டு குறித்து நான் மாற்று கருத்து தெரிவித்ததாக வலம் வரும் தகவல் வெறும் வதந்தி. நான் பீட்டாவின் விளம்பர தூதரும் அல்ல. சைவ உணவு உண்ணும் பழக்கம் கொண்டவர் என்பதால் பீட்டா எனக்கு ஒருமுறை விருது வழங்கியது. அவ்வளவுதான். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.