யாழ்.வன்முறைகளுடன் தொடர்புடைய 29 பேருக்கு ஏற்பட்ட நிலை!

யாழ்.குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுக்கள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

வடக்கில் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம், சுன்னாகம், மானிப்பாய், கோப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களின் மறைவிடங்களில் நடாத்தப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து ஏழு வாள்களும் எட்டு மோட்டார்ச்சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வடக்கில் 53 பொலிஸ் நிலையங்கள் காணப்படுகின்ற போதிலும் நான்கு பொலிஸ் நிலையப் பகுதிகளில் மாத்திரம் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களையடுத்தே வன்முறைக் குழுவினரின் மறைவிடங்களில் சிறப்புச் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்களான இளைஞர்களிடம் எந்தவொரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலும் கிடையாது. சில போட்டியாளர்களை இலக்கு வைப்பதற்காகச் சில பிரதேச அரசியல்வாதிகள், வணிகர்கள் இவர்களின் பின்னணியில் காணப்படுகின்றார்கள்.

இத்தகைய குழுக்களின் செயற்பாடுகள் குறித்து 0766 093 030 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும்.

இவ்வாறு வழங்கப்படும் தகவல்கள் இரகசியமாகப் பேணப்படுமெனவும், தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.