யாழ்.குடாநாட்டில் இரு இடங்களில் தொல்லியல் ஆய்வு பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தின் இரு பகுதிகளில் வரலாற்று கால தொல்லியல் சான்றுகளை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் காணப்படும் ஒல்லாந்தர் கால கோட்டை மற்றும் அதற்கு முற்பட்ட கால துறைமுக சான்றுகளை மீட்கும் வகையில் இவ் ஆய்வு பணிகள் ஆரம்பிக்கப்படுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் அத் துறைமுகம் புனரமைக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக அங்கிருக்கும் வரலாற்று தொல்லியல் சான்றுகளை மீட்பதற்காக தொல்லியல் திணைக்களம் ஆய்வு பணிகளை ஆரம்பித்துள்ளது.

இதேபோன்று அல்லைப்பிட்டி பகுதியிலும் பண்டைய சீன பொருட்களை கண்டறியும் நோக்கில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மத்திய கலாச்சார நிதியத்தினரும் சீன அரசாங்கமும் இணைந்து இவ் ஆய்வு பணியினை முன்னெடுத்து வருகின்றன.

வரலாற்று காலத்தில் இப் பகுதிக்கு வந்திருந்த சீன கப்பலொன்றிலிருந்து கொண்டுவரப்பட்ட சீனப் பொருட்களை மீட்கும் வகையிலேயே இவ் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை இவ் அகழ்வு பணிகள் தொடர்பான முழுமையான உத்தியோகபூர்வ தகவல்கள் ஆய்வின் முடிவில் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.