யாழ்ப்பாணத்தில் மர்மக் குள்ளர்கள் என்ற போர்வையில் செயற்படுவது இவர்களா?

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் நேற்றைய தினமும் குள்ள மனிதர்கள் தொடர்பான அசாதாரண நிலைமை காணப்பட்டதாக அந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். வட்டுக்கோட்டை முதலியார் கோவில் பகுதியைச் சேர்ந்த மக்களே இவ்வாறு தெரிவித்தனர்.

குறிப்பாக அப்பிரதேசத்திலுள்ள சில வீடுகளில் இனந்தெரியாத நபர்களால் கற்கள் கொண்டு எறியப்பட்டதாகவும் இதனால் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்டோர் அலறியடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு ஏழு மணிக்குப் பின்னர் இந்த அசாதாரண நிலை ஏற்பட்டதாக தெரிவித்த குறித்த பிரதேசத்து மக்கள் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் யார் என வெளிப்படையாக இனங்காணமுடியவில்லை என தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குள்ள மனிதர்கள் என்ற போர்வையில் பிரதேசத்திலுள்ள சில விஷமிகளாலும் இவ்வாறான கல்லெறி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.

அராலியில் தொடர்ந்த குள்ள மனிதர்கள் அட்டகாசம் தற்பொழுது வட்டுக்கோட்டையின் முதலியார் கோவில் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலையில் மக்களால் இவ்வாறான சந்தேகம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.