நல்லூர் ஆலய திருவிழாக் கால வியாபார நிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் - ஆணையாளர் சபைக்கு அறிவிப்பு

ஈழ நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா கால வியாபார நிலையங்களுக்கு இம்முறை கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று யாழ்.மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையின் 6ஆவது அமர்வு  (31) செவ்வாய்கிழமை காலை

மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னொல்ட் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது நல்லூர் ஆலய திருவிழா காலங்களில் வியாபார நிலையங்களுக்கு அனுமதி வழங்குது தொடர்பில் விவாதிக்கப்பட்டது. அதில் பங்கேற்று சபைக்கு விளக்கமளிக்கும் போதே ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

நல்லூர் கந்தசுவாமியார் ஆலய சுற்றாடலில் மொத்தமாக 37 வியாபார நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதிகள் கோள்வி கோரல் ஊடாக வழங்கப்படவுள்ளன. ஒரு பகுதி கேள்விகோரல் நிறைவடைந்துள்ள நிலையில் மறு கேள்வி கோரலுக்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

மாநகர சபையால் வழங்கப்படும் வியாபார நிலையங்கள் தொடர்பில் ஆலயத்தினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

ஆலய வெளி வீதியில் ஆலயத்தின் புனித தன்மையைக் கருத்தில் கொண்டு அங்கு கட்டப்படும் சிவப்பு வெள்ளை துணிகளின் எல்லைக்கு அப்பால் வியாபார நிலையங்களுக்கான அனுமதி வழங்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

அந்தக் கோரிக்கையினை ஏற்றே இம்முறை வியாபார நிலையங்களுக்கான அனுமதி வழங்கப்படும்.

மேலும் கடந்த காலங்களில் வியாபார நிலையங்களுக்கான கேள்வி கோரலின் போது, வியாபார நிலையங்களின் உரித்தை பெறுகின்றவர்கள், பின்னர் மாநகர சபைக்கு செலுத்திய பணத்தினை விட பன்மடங்கு பணத்திற்கு அந்த உரிமத்தை விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதனால் இம்முறை கோள்வி கோரலின் போது அந்த வியாபார நிலையத்தை பெற்றுக் கொள்பவரே ஆலய திருவிழா முடியும்வரை அதனை நடத்த முடியும்.

வேறு யாரும் அந்த வியாபார நிலையத்தை நடத்துவது, அல்லது வேறு யாருக்கும் உரிமத்தை விற்பனை செய்வது தொடர்பில் கண்டறியப்பட்டால் உடனடியாக அவரின் வியாபார உரிமம் நீக்கம் செய்யப்படும் – என்றார்.