நாயால் இளம் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட அவலம்: யாழ். உரும்பிராயில் சம்பவம் (Videos)

யாழ்.உரும்பிராயில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தரொருவர் திடீரெனக் குறுக்கே பாய்ந்து ஓடிய நாயுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்துள்ளார்.இந்த விபத்துச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை(31) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த குடும்பஸ்தர் யாழ்.குப்பிளானிலிருந்து கோப்பாய் நோக்கி பலாலி பிரதான வீதியூடாக மோட்டார்ச் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் உரும்பிராய் மடத்தடிப் பகுதியில் திடீரென வீதியின் குறுக்கே நாயொன்று பாய்ந்து ஓடியுள்ளது.

இதனால்,தடுமாற்றமடைந்த குறித்த குடும்பஸ்தர் மோட்டார்ச் சைக்கிளை வீதியோரமாகத் திருப்ப முற்பட்டுள்ளார்.

எனினும், வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்ச் சைக்கிள் நாயை மோதித் தள்ளியது. இதனால், தூக்கிவீசப்பட்ட நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளம் குடும்பஸ்தர் கையிலும், காலிலும் கடும் காயங்களுக்குள்ளானார்.

குறித்த பகுதியில் ஒன்றுகூடிய இளைஞர்கள் குடும்பஸ்தரை மீட்டு அவசர அம்புலன்ஸ் இலக்கத்திற்கு உடனடியாகத் தகவல் வழங்கினர். இதனையடுத்து படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.