யாழில் பெண்ணின் வாயைப் பொத்தி கழுத்தைக் காயப்படுத்திய மர்ம நபர்!

யாழில் தைத்துக்கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தை நபர் ஒருவர் வெட்டிக் காயப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் - தும்பளைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றுப் பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் நாற்பத்தெட்டு வயதுடைய சத்தியசோதி சிறிகௌசி என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவர் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ஆடைகளைத் தைத்துக்கொண்டிருந்தபோது அங்கு பிரசன்னமான நபர் ஒருவர் அவரது வாயைப் பொத்தியுள்ளார். இதனால் குறித்த நபரின் பிடியிலிருந்து விலகுவதற்காக பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்ட பெண் உரத்துக் கத்தியுள்ளார்.

இதன்போது குறித்த பெண்ணின் கழுத்தில் அந்த நபர் கூரிய ஆயுதம் ஒன்றினால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்த விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.