யாழ்.மாநகரசபையின் ஈபிடிபி உறுப்பினருக்கு நேர்ந்த பரிதாபம்!!

யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் பங்கேற்கவும், அங்கு வாக்களிக்கவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபையின் உறுப்பினர் கே.வி.குகேந்திரனுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலக் தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது.இரட்டைக் குடியுரிமை கொண்டவர் என்பதால் இலங்கை தேர்தல் விதிகளுக்கு அமைவாக அவர் மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்ய முடியாது என சுட்டிக்காட்டி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்து மூலம் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான தீர்ப்பை வழங்கும் வரை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் கே.வி.குகேந்திரன் சபை அமர்வுகளில் பங்கேற்க இடைக்காலத் தடை உத்தரவையிட வேண்டும் எனவும் மனுதாரரால் கோரப்பட்டது.அந்தவகையில் மனுதாரரின் குறித்த விண்ணப்பத்தை ஏற்ற கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள், இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

இதனால் கே.வி குகேந்திரன் யாழ் மாநகர சபை அமர்வுகளில் இனி பங்கேற்க முடியாமல் போயுள்ளது. இவர் ஈ.பிடி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபிடிபியின் யாழ் மாவட்ட அமைப்பாளராகவும் இருந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.