யாழ்.குடாநாட்டில் வாழைப்பழ விலை திடீர் உயர்வு

யாழ்.குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச்சந்தையில் இன்றைய(13) விலை நிலைவரப்படி ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 50 ரூபா முதல் 60 ரூபா வரையும், ஒரு கிலோ இதரை வாழைப்பழம் 50 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

தற்போது மாம்பழம், வாழைப்பழம் ஆகிய பழ வகைகளின் சீசன் யாழ்.குடாநாட்டில் நிறைவுபெற்றுள்ளமை மற்றும் தற்போதைய காலநிலை என்பனவே வாழைப்பழ விலை உயர்வுக்குக் காரணமென வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போதைய காலநிலை காரணமாகத் தரமான வாழைக்குலைகள் சந்தைக்கு எடுத்துவரப்படுவதில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, எதிர்வரும் ஆவணி மாதம் யாழ்.குடாநாட்டின் பிரசித்தி பெற்ற ஆலயங்களான நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம், வடமராட்சி ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயம் உட்படப் பல ஆலயங்களின் வருடாந்த மஹோற்சவங்கள் ஆரம்பமாகவுள்ளமையால் கதலி வாழைப்பழத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.