நியூசிலாந்தில் ரசிகருடன் டில்ஷான் மோதியது சரியா? மேத்யூஸ் விளக்கம்

நியூசிலாந்தில் ரசிகர் ஒருவருடன் டில்ஷான் மோதிய விவகாரத்தில் இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதிய 2வது மற்றும் கடைசி டி20 போட்டி ஆக்லாந்து ஈடன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் 9 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்த போட்டி முடிந்து இலங்கை வீரர்கள் பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்த போது டில்ஷானை அழைத்த ரசிகர் ஒருவர் அவரை உடனடியாக ஓய்வு பெறுமாறு சீண்டினார்.

உடனே "ஏன்.. நீ வந்து விளையாட போகிறாயா?" என டில்ஷான் கோபமாக பதிலளித்தார். மேலும், மைதானத்தில் நின்று கொண்டிருந்த அதிகாரியிடம் புகார் தெரிவித்து விட்டு கோபமாக சென்றார்.

இந்த விவகாரம் பற்றி இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறுகையில், அங்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. சிலர் சீண்டும் போது நாம் நமது நிலையை தவறவிடுவது வழக்கமான ஒன்று தான்.

அந்த ரசிகரின் இடத்தில் இருந்து பார்த்தால் எங்களின் தோல்வி அவரையும் காயப்படுத்தியுள்ளது. இதனால் டில்ஷான் செய்தது சரியா அல்லது தவறா என்பதை உறுதியாக என்னால் கூற முடியாது” என்று கூறியுள்ளார்.