யாழ். கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் முதல் கட்டமாக 41 நோயாளருக்கு கொழும்பில் இலவச கண்புரை சத்திர சிகிச்சை

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் மனித நேய வேலை திட்டத்தின் கீழ் வட மாகாணத்தை குறிப்பாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த கட்ராக் நோயாளர்களுக்கு இலவச சத்திர சிகிச்சை மேற்கொள்கின்ற செயல் திட்டத்தின் முதல் கட்ட பயனாளிகள் 41 பேர் இன்று வெள்ளிக்கிழமை காலை கொழும்புக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

தென்னிலங்கையை சேர்ந்த வைத்திய நிபுணர்களின் ப்ங்கேற்புடன் நாளை சனிக்கிழமை இவர்களுக்கு கட்ராக் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வைத்திய கண்காணிப்பில் வைத்திருக்கப்படுவார்கள்.

இவர்களை யாழ்ப்பாணத்தில் இருந்து அழைத்து சென்று, சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தி, பராமரித்து, மீண்டும் திருப்பி அழைத்து வருகின்ற ஏற்பாடுகள் அனைத்தும் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் அறிவுறுத்தல், வழிகாட்டல் ஆகியவற்றுக்கு அமைய இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான நாடளாவிய இணைப்பாளர் ஏ. செல்வாவின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படுகின்றன.

முதல் கட்ட பயனாளிகள் 41 பேரும் நேற்று வியாழக்கிழமை காலை பலாலி இராணுவ வைத்தியசாலையில் முன்கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் கட்ராக் நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து கொண்டு செல்கின்றது. இந்நோயாளர்களில் அநேகர் வயோதிபர்கள் ஆவர். இதே நேரம் இந்நோயாளர்கள் சத்திர சிகிச்சை பெறுவதற்கு பெரும்பாலும் யாழ். போதனா வைத்தியசாலையையே நம்பி உள்ளனர். இந்நிலையில் கட்ராக் நோயாளி ஒருவர் இவ்வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பெறுவதற்கு சாதாரணமாக மூன்று மாதங்கள் வரையில் காத்திருப்பு மேற்கொள்ள வேண்டி உள்ளது.  இதே நேரம்யாழ்ப்பாணத்தில் தனியார் வைத்தியசாலையில் இச்சத்திர சிகிச்சையை ஒரு நோயாளி பெற வேண்டுமானால் 100,000 - 160,000 ரூபாய் வரையில் செலவு செய்ய வேண்டி உள்ளது.