யாழ்.நீதிமன்ற வாயிலில் வைத்து சந்தேநபர் மீது பொலிஸார் தாக்கினரா? விசாரிக்க நீதிவான் உத்தரவு

சந்தேநபரொருவர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வழக்கு தவணைக்காக வந்தார். அவருக்கு மற்றொரு வழக்கில் மன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த பிடியாணையை நிறைவேற்ற யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்ற வாயில் காத்திருந்தனர். அதற்காக சந்தேகநபரை நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக வருமாறு பொலிஸார் அழைத்தனர். எனினும் வழக்கு தவணைக்காக வந்துள்ளதாக அவர் மறுத்துவிட்டார்.

எனினும் நீதிமன்று மதிய இடைவேளைக்கு இடைநிறுத்தப்பட்ட போது, சந்தேகநபர் வெளியே வர, அவரைப் பொலிஸார் பிடித்துள்ளனர்.

“எனக்கு இன்னும் இன்றைய வழக்கு முடியவில்லை. சட்டத்தரணியுடன் பேசிவிட்டு வருகின்றேன். என்னை விடுங்கோ” என சந்தேகநபர் பொலிஸாரிடம் கேட்டுள்ளார்.

அவரை ‘அமைதியா வா’ என அழைத்து பொலிஸ் உத்தியோகத்தர் கன்னத்தில் அடித்தார் என குற்றஞ்சாட்டப்பட்டது. பொலிஸார் அடித்ததும் சந்தேகநபர் தப்பித்துவிட்டார்.

அதனால் அன்றைய வழக்குத் தவணையில் மன்றில் தோன்றிய சந்தேகநபரின் மனைவி, நடந்தவற்றை மன்றுரைத்தார்.

சந்தேநபரின் மனைவியின் வாக்குமூலத்தை எடுக்க உத்தரவிட்ட நீதிமன்று வழக்கை நேற்று திங்கட்கிழமை வரை ஒத்திவைத்தது.

வழக்கு நேற்று கூப்பிடப்பட்டது. சந்தேநபர் மன்றில் முன்னிலையானார். அவரும் நடந்தவற்றைங மன்றுரைத்தார்.

பொலிஸாரின் அச்சுறுத்தலால்தான் வழக்கு தவணைக்கு மன்றில் முற்படாமல் தப்பித்ததாக சந்தேநபர் மன்றிடம் தெரிவித்தார்.

அதனை ஆராய்ந்த நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சந்தேகநபரின் வாக்குமூலத்தைப் பெற்று விசாரணைகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டார்.