கொக்குவில் இந்து ஆசிரியர் மீது தாக்குதல்: சந்தேகநபர்கள் இருவருக்கும் பிணை

கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட சுமார் ஒரு மாதமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவருக்கும் பிணை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது.

கொக்குவில் இந்துக் கல்லூரின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு பொறுப்பாசிரியரும் உயர்தர கணித பாட ஆசிரியருமான நாடராஜா பிரதீபன் (வயது -41), கடந்த 6ஆம் திகதி பாடசாலைக்கு அண்மையாக வைத்து தாக்கப்பட்டார்.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்றே அவர் மீது தாக்குதலை மேற்ககொண்டது என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

ஆசிரியர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்கள் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

சந்தேகதபர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

“மூன்றாவது சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதுவரை சந்தேகநபர்கள் இருவரினதும் நீடிக்கப்படவேண்டும்” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

“கிட்டத்தட்ட ஒரு மாத காலம் சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.பொலிஸார் வழக்கில் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை” என்று சுட்டிக்காட்டி நீதிவான் சி.சதீஸ்தரன், சந்தேகநபர்கள் இருவரையும் பிணையில் விடுவித்து கட்டளை வழங்கினார்.