விசாரணை நடத்துமாறு வடக்கு முதலமைச்சருக்கு ஆளுனர் கடிதம்

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வடக்கு மாகாணசபையின் தற்போதைய அமைச்சர்கள் முறைகேடான வகையில் மாகாண சபையின் நிதியை கையாளுவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அமைச்சர்களால் பயன்படுத்தப்படாத வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பியதாக பணம் பெறப்பட்டுள்ளதாகவும், அமைச்சர்களின் தனிப்பட்ட ஆளணிக்கு என ஒதுக்கப்பட்ட பணம், அமைச்சர் ஒருவரின் கூட்டு வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், மற்றொரு அமைச்சர் தனது மகளை தனிப்பட்ட ஆளணியில் இணைத்துள்ள போதும், அவர் பணியகம் வருவதில்லை என்றும், இன்னொரு அமைச்சர் கட்சி அலுவலகத்தை தனது அதிகாரபூர்வ செயலகமாக மாற்றி அதற்குரிய வாடகைப் பணத்தைப் பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து, வடக்கு மாகாணசபையில் மீண்டும் பிரச்சினைகள் வெடித்துள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தலைமைச் செயலர் ஊடாக விசாரணை நடத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சருக்கு, ஆளுனர் கடிதம் அனுப்பியுள்ளார்.

எனினும், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். முதலமைச்சர் நாடு திரும்ப 20 நாட்களாகும். 

ஆகையினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.