யாழில் நடந்த பயங்கரம்! அச்சத்தால் உயிரிழந்த நபர்

உறவினர் ஒருவரினால் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்ற அச்சம் காரணமாக நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான அச்சம் காரணமாக யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டையில் வாழ்ந்து வந்த 46 வயதான முத்துராசா முனீஸ்வரன் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவைச் சேர்ந்த முத்துராசா முனீஸ்வரன் தனக்குத் தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார். கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தினால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக மரண விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த மூன்றாம் திகதி ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டவரை, இன்னொரு உறவினர் கடுமையாக தாக்கியுள்ளார்.

தனது வீட்டில் உறக்கத்திலிருந்த குடும்பத் தலைவரை அவரது வீட்டுக்குள் அத்துமீறிச் சென்று தடி, வயர் என்பவற்றாலும் கால்களாலும் தாக்கியுள்ளார். எனினும் இதிலிருந்து தப்பித்துக் கொண்டவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 7 ஆம் திகதி குடும்பத் தலைவர் வீதியில் சென்றுகொண்டிருந்போது எதிர்ப்பட்ட மனைவியின் உறவினர் ஒருவர், அடித்தது போதாது என்று கூறி மீண்டும் தாக்குவேன் என்று அச்சுறுத்தியுள்ளார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

அதனால் தன்னை மீண்டும் தாக்குவார் என்று அஞ்சிய குறித்த குடும்பத் தலைவர் அன்றிரவு தனக்குத் தானே தீ மூட்டியுள்ளார் என்று கூறுப்படுகின்றது. எரிந்த நிலையில் அவரை மீட்ட அயலவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பயனளிக்காது நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

உயிரிழப்புக்குக் காரணமானவர் மனைவியின் உறவினரான 26 வயதுடையவரே என்று இறந்தவரின் மனைவியும், சகோதரனும் விசாரணையில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். இது தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணை நடத்தினார். சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.