16 வயதுச் சிறுமியைக் கடத்தி பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கியவனுக்கு 15 வருட தண்டனை!!

16 வயதுக்குட்பட்ட சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்வுக்குட்படுத்திய இளைஞனுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று(12-03-2018) தீர்ப்பளித்தார்.

குற்றவாளியின் இந்தக் குற்றத்துக்கு உதவிய அவரது நண்பருக்கு 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வடமராட்சி, வல்வெட்டித்துறையில் 2014ஆம் ஆண்டு செம்ரெம்பர் மாதம் 13 வயதுச் சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார்.சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் 22 வயதுடைய (குற்றம் இடம்பெற்ற போது) இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.அவர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன.

அதன் நிறைவில் சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வழக்குக் கோவைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டன.முதலாவது சந்தேநபர் மீது கடத்தல் மற்றும் வன்புணர்வுக் குற்றச்சாட்டும் இரண்டாவது சந்தேகநபர் மீது கடத்தல் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு, சட்ட மா அதிபரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ‘சந்தேகநபர்கள் இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.

தமது குற்றத்துக்காக அவர்கள் தற்போது மனம் வருந்துகின்றனர். அவர்கள் இருவரினதும் குடும்ப நிலையைக் கருத்திற்கொண்டு குறைந்தபட்ச தண்டனையை வழங்குமாறு மன்றிடம் கோருகின்றேன் என்று எதிரிகளின் சட்டத்தரணி மன்றில் கருணை விண்ணப்பம் செய்தார்.

எதிரிகள் குற்றத்தை ஏற்றுக்கொண்டமையால் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு பெற்றுக்கொடுக்க மன்று உத்தரவிடவேண்டும் அரச சட்டவாதி சுகாந்தி கந்தசாமி மன்றில் விண்ணப்பம் செய்தார்.குற்றவாளிகள் இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். முதலாவது எதிரி சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்ந்துள்ளார்.

இரண்டு குற்றங்களுக்காகவும் முதலாவது எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. முதலாவது எதிரி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபா இழப்பீட்டை வழங்கவேண்டும். அதனை வழங்கத் தவறின் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்.

தண்டமாக 5 ஆயிரம் ரூபா செலுத்தவேண்டும்.அதனை செலுத்தத் தவறின் ஒரு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும். இரண்டாவது எதிரி, சிறுமியைக் கடத்திச் செல்ல முதலாவது எதிரிக்கு துணை நின்றுள்ளார்.அதற்கு அவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. அந்தத் தண்டனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

அத்துடன், 5 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்தவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் ஒரு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.