தமிழர்களால் கடவுளின் அவதாரமாக பார்க்கப்படுகின்றார் ஜனாதிபதி மைத்திரிபால

செய்த தப்புக்காக மன்னிப்புக் கேட்பவன் மனிதன். அதை ஏற்று மன்னிப்பவன் கடவுள்....... இது விறுமாண்டி படத்தில் கமலகாசன் சொல்லும் பஞ்ச் வசனம்.  இது பஞ்ச் வசனமாக இருந்தாலும் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்பதோ அல்லது தப்புச் செய்தவனை மன்னித்து விடுவதோ உண்மையில் மனித மனத்தின் இயல்பாக்கத்தில் முடியாத காரியமாகத்தான் கருதப்பட்டு வருகின்றது.  மன்னிப்புக் கேட்டல், மன்னித்தல் என்பவை உலக மனித இனத்தில் இருந்திருந்தால் உலகத்தில் தற்போது பயங்கரவாத நடவடிக்கைகள், போர்கள் ஒரு போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கமாட்டாது.

எத்தனை கடவுள்கள் உலகத்தில் இருந்தும் எத்தனை சமயங்கள் உலகத்திற்குப் போதித்தும் தொடர்ந்து உலகம் தறிகெட்டுப் போய்க் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் மன்னிப்பு என்பது இல்லாததே....

ஆனால் இலங்கையில் தற்போது புதிய திருப்புமுனை ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. ‘நல்லாட்சி செய்வதற்காக வருகின்றேன்‘ எனக் கூறி தமிழர்களின் மனங்களுக்குள் புகுந்து அவர்களின் பெரும் விருப்பில் வாக்குப் பெற்று ஜனாதிபதியாக வந்துள்ளார் மைத்திரிபாலசிறிசேன. அவர் கூறியபடியே தற்போது நல்லாட்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழர்களுக்கான விடிவும் அவரது ஆட்சியிலேயே வரத்தொடங்கியுள்ளது. அவரது நல்லெண்ணத்தின் முக்கிய கட்டமாக தன்னைக் கொலை செய்வதற்காக வந்ததாகச் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட ஒரு அரசியல் கைதியை அவர் கட்டித் தழுவி மன்னிப்பளித்து விடுவித்துள்ளார். 10 வருடங்களாக எந்தவித விசாரணைகளும் இன்றித் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவராஜா ஜேனிபனுக்கு ஜனாதிபதி கொடுத்த மன்னிப்பு அவரைக் கடவுளுக்கு நிகராக்கியுள்ளது.

ஜனாதிபதியால் மன்னிப்பு கொடுக்கப்பட்டு விடுதலையானவுடன் ஜேனிபன் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்து என்னவெனின் ‘இப்படி ஒரு ஜனாதிபதி இருந்திருந்தால் இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சனையே, இனப்பிரச்சனையோ வந்திருக்காது‘ என்பதே.

ஆனால் தற்போது ஜனாதிபதி மைத்திரி அவர்களை தமிழ் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி அவரையும் தமிழ் மக்களிடம் பேரினவாதியான விம்பமாக காட்ட முயற்சிகளும் சதிகளும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

வடக்கு கிழக்கு மக்களிடம் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களிடம் அவருக்கு இருக்கும் நன்பதிப்பைக் சீரழிப்பதற்கு சிலர் பெரும் முயற்சிகள் செய்து கொண்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகின்றது.

யாழ்ப்பாணத்தில் சிலர் தமது சுயநலனிற்கா அரசியல் செய்து பிழைப்பு நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் சிலர் தமிழ்த்தேசியம் கதைத்தும் இன்னும் சிலர் தேசியகட்சிகளின் கொள்கைகளைக் கதைத்தும் அரசியல்வாதிகள் என்ற போர்வையில் பதுங்கி இருந்து பல கேவலங்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறனவர்களை மக்கள் இனம்கண்டு ஒதுக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிலும் வர்த்தகப் பிரமுகர் என்ற போர்வையில் தேசியக் கட்சி ஒன்றின் பெயரைப் பயன்படுத்தி அரசியல்வாதியாக உருமறைப்புச் செய்து

பல மோசடிகள் புரிந்து சிறை சென்றும், மக்களையும் வியாபாரிகளையும் ஏமாற்றி காசு முறைகேடுகள், போதைப் பொருள் வியாபாரம் போன்றவற்றை செய்துவருவதாக மக்களால் சந்தேகிக்ப்படும் நபர் ஒருவர் ஜனாதிபதி பற்றிய தவறான கருத்துக்களைக் கூறி யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வருவதை தடுத்து நிறுத்துவதற்கு பெரும் முயற்சி செய்துள்ளார். குறித்த நபர் முன்னர் விடுதலைப் புலிகளின் முகவராக இருந்தவர் எனவும் விடுதலைப் புலிகளிடமும் ஏமாற்று வேலைகள் புரிய முற்பட்டு அவர்களிடம் தண்டனை பெற்றவர் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல்கள் பலவற்றில் போட்டியிட்டு நுாற்றுக்கும் குறைவான வாக்குளை கொடுத்து யாழ்ப்பாண மக்களே இவரை அரசியலில் இருந்து அடித்து விரட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இவ்வாறான நபர், தான் குறித்த தேசியக் கட்சியில் இருப்பதாக இனியும் கூறிக் கொண்டு இருந்தால் அந்தக் கட்சிக்கே கேவலமாகும். அத்துடன் ‘நல்லாட்சி‘ நடக்கும் இந் நேரத்தில் தமிழ்மக்கள் சந்தோசத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் போது அந்த ஆட்சியைக் கொடுத்த ஜனாதிபதி மைத்திரி அவர்களை தமிழ் மக்களிடம் இருந்து பிரிக்க முற்படும் இந்த கழிவு கெட்ட நபரைப் போன்றவர்களால் நல்லாட்சிக்கே அவமானமாக அமைந்துவிடும் என்பது உண்மை.

இதே வேளை தமிழ்மக்களின் இதயத்துடிப்பாக இருக்கும் எமது இணையத்தளமும் நல்லாட்சி செய்யும் ஜனாதிபதியின் அரசாங்கக் கதிரையின் ஒரு காலாக யாரும் கதிரையை உதைத்து விழுத்தாத அளவுக்கு உறுதியுடன் எப்போதும் நிற்கும்.

அரசியல் கைதியாக பத்துவருடங்கள் விசாரணைகள் ஏதும் இன்றி சிறைக்குள் இருந்த சிவராஜா ஜேனிபனின் நிலையை வெளியே காண்பித்ததே எமது ஊடகம் என்பதை நாம் இங்கு தெரிவித்துள்ளோம். நாம் வெளியிட்ட செய்தியாலேயே தற்போது சிவராஜா ஜேனிபனிபன் விடுதலையாகியுள்ளான். எமது செய்தியை கவனத்தில் எடுத்தே சிவராஜா ஜேனிபனின் நிலை ஜனாதிபதிவரை சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இணைப்பு இங்கு தரப்பட்டுள்ளது.

கடவுள் என்பவன் நேரிடையாக மக்களுக்கு வந்து உதவுவதில்லை. அவன் மனித அவதாரங்களினுாடேயே மக்களைக் காப்பாற்றியுள்ளான். புத்தனாகவும், ஜேசுவாகவும், கிருஸ்ணனாகவும் வந்து மக்களை நல்வழிப்படுத்தியுள்ளான். இவற்றை உணர்ந்து எமது இனம் நல்லாட்சி செய்யும் ஜனாதிபதிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி சுபீட்சமான எதிர்காலத்தைக் கட்டி எழுப்புதல் அவசியமாகும்.