ஊடகங்கள் அடிவருடிகளைப் போல் செயற்படக்கூடாது!! யாழ்ப்பாணத்தில் ரணில் தெரிவித்தார்

சர்வாதிகாரமாக 18ஆவது சீர்த்திருத்தத்தை உருவாக்கிய ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஏனையவர்களுக்கு வக்காலத்து வாங்கிய வடக்கு, தெற்கு ஊடகங்கள், மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் வைபத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை கூறினார்.

அரசியல் அமைப்பை திருத்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் உள்வாங்கி அரசியல அமைப்பு சபையை உருவாக்க ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அவர்கள் வெளிப்படையாக செயற்பட வேண்டும். 18ஆவது சீர்திருத்தத்தை பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஏனையவர்கள் சர்வாதிகாரமாக உருவாக்கியதை போல செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இவர்கள், மாகாண சபையுடனும் பேசிஅவர்களுடைய கருத்துகளை அறிய வேண்டும். பொதுமக்களின் கருத்துகளும் பெறவேண்டும். அரசியல் அமைப்பு என்று ஒன்று இல்லை. அவை மக்களின் கருத்தில் இருந்தே உருவாக்கப்பட வேண்டும்.

சர்வாதிகாரமாக செயற்பட்டவர்கள், தோல்வியடைந்;த பின்னால் தான் வெளிப்படை பற்றி தற்போது குழறத் தொடங்கியுள்ளனர்.

மீண்டும் அதனை குழப்ப வேண்டாம் என்று, சர்வாதிகாரமாக 18ஆவது சீர்த்திருத்தத்தை உருவாக்கிய ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஏனையவர்களுக்கு வக்காலத்து வாங்கிய ஊடகத்துக்கு சொல்கின்றேன்.

வடக்கு மற்றும் தெற்கு ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட போது வக்காலத்து வாங்கிய ஊடகங்கள் இன்றைய சூரிய உதயத்தின் பின்னராவது மாற வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.