அவுஸ்திரேலிய மண்ணில் விஸ்வரூபம்: சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் சதம் விளாசிய இந்திய வீரர் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

பெர்த்தில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 171 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்தார்.

இந்த நிலையில் தற்போது பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் 2வது ஒருநாள் போட்டியிலும் சதம் (124) அடித்துள்ளார். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

* அவுஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து அடுத்தடுத்து 2 சதம் விளாசியவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா 3வதாக இணைந்துள்ளார். முன்னதாக விவிஎஸ் லட்சுமணன் (இந்தியா), கிரேம் ஹிக் (இங்கிலாந்து) தொடர்ந்து 2 சதம் அடித்துள்ளனர்.

* காப்பா மைதானத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன் 2008ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் எடுத்த 91 ஓட்டங்களே அதிகபட்சமாக இருந்தது.

* காப்பா மைதானத்தில் அதிக ஓட்டங்களை சேர்த்த ஜோடிகள் வரிசையில் விராட் கோஹ்லி-ரோஹித் சர்மா (125 ஓட்டங்கள்) 3வது இடம் பிடித்துள்ளனர். ஹொப்பர்-பிரையன் லாரா (154 ஓட்டங்கள்), டிராவிட்- லட்சுமணன் (133 ஓட்டங்கள்) முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

* 20 ஒருநாள் போட்டிகளிலே அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர்கள் பட்டியலில் சச்சின், லாராவுக்கு அடுத்து 3வதாக ரோஹித் சர்மா உள்ளார்.