அடுத்த தைப்பொங்கலுக்குள் தீர்வுகாண வேண்டும் - அமைச்சர் விஜயகலா

அடுத்த தைப்பொங்கலுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் - பொங்கல் விழாவில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா

தற்போது அரசியல் யாப்பு மாற்றத்துக்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நல்லெண்ணத்தை வளர்த்து அரசியல் தீர்வுகாண நாம் அனைவரும் உறுதிபூண வேண்டும் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அழைப்பு விடுத்தார்.

தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் அடுத்த தைப்பொங்கலுக்குள் தீர்வுகாணப்பட வேண்டும்.  வலிகாமம் வடக்கு மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணரவே பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பொங்கல் விசேட பூஜையை நடத்த தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.

தற்போது அரசியல் யாப்பு மாற்றத்துக்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நல்லெண்ணத்தை வளர்த்து அரசியல் தீர்வுகாண நாம் அனைவரும் உறுதிபூண வேண்டும் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அழைப்பு விடுத்தார்.

தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் அடுத்த தைப்பொங்கலுக்குள் தீர்வுகாணப்பட வேண்டும்.  வலிகாமம் வடக்கு மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணரவே பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பொங்கல் விசேட பூஜையை நடத்த தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.

தேசிய பொங்கல் விழா நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வரவேற்புரை ஆற்றியபோதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

உழவர் பெருநாளான  தைப்பொங்கல்  திருநாள்  தேசிய விழாவாக யாழ். மண்ணில்  இன்று கொண்டாடப்படுவதையிட்டு நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம். யுத்தத்தில் பெரும்  பாதிப்புக்களை  சந்தித்த  வடபகுதியில்  இந்த விழாவை தேசிய விழாவாகக் கொண்டாட வேண்டுமென்ற  எனது  வேண்டுகோளை  ஏற்று அதற்கான  முயற்சிகளை  மேற்கொண்ட  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

கடந்த நவராத்திரி விழா  பாராளுமன்ற கட்டடத்தொகுதியில்  இடம் பெற்றபோது  அதில் பங்கேற்றிருந்த  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தைப்பொங்கல் திருநாளை  தேசிய விழாவாக   யாழ்ப்பாணத்தில்  கொண்டாட வேண்டும் என்று  நான்  வினயமாக கேட்டுக்கொண்டேன்.  இதனையடுத்து  உடனடியாகவே  இந்து கலாசார  அமைச்சர் டி.எம். சுவாமிநாதனுடன்   கலந்துரையாடிய பிரதமர் இதற்கான உத்தரவை  பிறப்பித்திருந்தார்.

இதற்கிணங்கவே  யாழ். மண்ணில்  தைப்பொங்கல் திருநாள் தேசிய விழாவாக  இன்று  கொண்டாடப்படுகின்றது.  யுத்தத்தின் போது  வடபகுதி மக்கள் சொல்லொணாத்துன்பங்களை அனுபவித்தனர்.  யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள்  நிறைவடைந்துவிட்ட போதிலும்  இன்னமும் மக்கள்   முன்னைய நிலைக்கு திரும்பவில்லை.  மக்களின்  காணிகள் அதிபாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் சுவீகரிக்கப்பட்டுள்ளன.   இவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ள  மக்களின் காணிகள் மீளவும் கையளிக்கப்படவேண்டும். இந்தப் பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் மீளக்குடியேற முடியாத நிலையில் தொடர்ந்தும்   அகதிகளாகவே  தங்கியுள்ளனர்.  இவர்கள் அனைவரும் மீளக்குடியேற்றப்பட வேண்டும்.

இதனால் தான் வலிகாமம் வடக்கு,  அதிபாதுகாப்பு வலயத்திற்குள்  உள்ள பலாலி இராஜ ராஜேஸ்வரி  அம்மன் ஆலயத்தில்  தேசிய பொங்கல் விழாவை   கொண்டாட வேண்டும்  என்று  நான் கோரியிருந்தேன்.  இதற்கு  பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க  இணக்கம் தெரிவித்திருந்தார். ஆனாலும்  அங்கு  பெருமளவான மக்கள் ஒன்று கூடுவதற்கு ஏற்ற வசதிவாய்ப்புக்கள்  இல்லை என்பதனால்  அந்த ஆலயத்தில் பூஜை வழிபாட்டை மட்டும் செய்துவிட்டு  இந்த மண்டபத்தில்  தேசிய விழா  நிகழ்வை  ஒழுங்கு செய்வதற்கு  முடிவு செய்யப்பட்டது.

வலிகாமம் வடக்கு மக்கள் கடந்த  மூன்று தசாப்தகாலமாக  இடம் பெயர்ந்த நிலையில்  நலன்புரி முகாம்களிலும்,  உறவினர், நண்பர்கள் வீடுகளிலும்  தங்கியுள்ளனர்.  இந்த மக்களின் துன்ப துயரங்களை வெளிக்காட்டவேண்டும் என்பதற்காகவும் அதிபாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள ஆலயங்களின் அவல நிலை குறித்து  வெளிக்கொணரவேண்டும் என்பதனாலேயுமே  இராஜ ராஜேஸ்வரி  அம்மன் ஆலயத்தில்  பொங்கல் விழாவை  கொண்டாடுவதற்கு    நான் முயற்சி மேற்கொண்டிருந்தேன். இன்று  அந்த ஆலயத்தில்  பொங்கல் பொங்கப்பட்டு  அங்கு நடைபெற்ற விசேட பூஜையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றிருந்தார்.  இது ஒரு வரலாற்று நிகழ்வாக  பதிவாகியுள்ளது.

பிரதமர்  இந்த இடங்களை  பார்வையிட்டுள்ளார்.  எனவே அவரின்  மனதில்  பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கும்.  தைபிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கிணங்க தமிழ் மக்களின்  அன்றாடப் பிரச்சினைகளையும், அடிப்படைப் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு  எமது அரசாங்கம்  முயன்று வருகிறது. இதற்கான  நல்லெண்ணத்தை  வெளிப்படுத்தும் விதமாகவே தேசிய பொங்கல் விழா யாழ். மண்ணில்  இன்று நடத்தப்படுகின்றது. நல்லெண்ணத்தை வெளிக்காட்டும் வகையிலேயே இந்த  நிகழ்வில்  பிரதமர்   வருகை தந்துள்ளார்.

இந்த வைபவத்தில் விசேட அதிதியாக கலந்துகொண்டிருக்கும் பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் ஹியுகோ ஸ்வையர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் தேசிய தைப்பொங்கல் விழா புதிய ஆரம்பத்துக்கான பலமான அத்திபாரம் என்று கூறியிருந்தார். அவரது கூற்று உண்மையிலேயே சரியானதாகும்.

2013 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரூன் கொழும்பு வந்திருந்தார். அவர் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களையும் சந்தித்திருந்தார். பிரித்தானியப் பிரதமர் அன்று வருகைதந்த போது நாட்டில் இருந்த நிலைமை பாரதூரமானதாகும். ஆனால் தற்போது அத்தகைய நிலைமையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை இங்கு வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் கருத்து பறைசாற்றுகின்றது. பொங்கல் விழாவில் பங்கேற்றுள்ள பிரித்தானிய அமைச்சரை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

தைபிறந்துள்ள இந்த வேளையில் மக்களின் காணிகள் அவர்களிடம் மீள  ஒப்படைக்கப்படுவதற்கான  நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.  இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.  அரசியலமைப்பை மாற்றியமைத்து இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும்  முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.  இதனைவிட  யுத்த  குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும்  நடவடிக்கையிலும், அரசாங்கம்  ஈடுபட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கைகள் இன்னமும் விரைவுபடுத்தப்பட வேண்டியுள்ளது.

காணாமல்போனோர் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம்,   போன்ற விடயங்களிலும் தீவிர அக்கறை காட்டப்படவேண்டும்.  பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு  அரசாங்கமானது  படிப்படியாக  நடவடிக்கைகளை  எடுத்து வருகின்றது.  கடந்த வருடம்   எமது அரசாங்கம் பதவியேற்றதையடுத்து வலிகாமம் வடக்கில்  ஆயிரம்  ஏக்கர்  நிலம் வரையில் பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டிருந்தது.  கிழக்கில் சம்பூர் பகுதியிலும்  பொதுமக்களின் காணிகள்  மீள ஒப்படைக்கப்பட்டன.

கடந்த வாரம்  வலிகாமம் வடக்கில் 701  ஏக்கர் காணிகளை  விடுவிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதியும் பிரதமரும்  தமிழ்  மக்களின்  காணிகளை மீளக்கையளிப்பது தொடர்பிலும் அவர்களை மீளக்குடியேற்றுவது தொடர்பிலும் அக்கறை செலுத்தி வருகின்றனர். இதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.  மக்களின் காணிகளை விடுவிக்கும் செயற்பாட்டிலும் அவர்களை   மீளக்குடியேற்றும்  விடயத்திலும்  துரிதப்போக்கு  காண்பிக்கப்படவேண்டும்  என்பதே  மக்களின்  எதிர்பார்ப்பாக உள்ளது.

எமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை  வைத்தே  எமது மக்கள்  ஜனாதிபதி தேர்தலின் போதும்,  கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போதும் வாக்களித்திருந்தனர். மக்களின்  நம்பிக்கைக்கு பாத்திரமாக  நாம்  செயற்படவேண்டியது  இன்றைய நிலையில் அவசியமானதாகும்.  கடந்த வருடம் வலிகாமம்  வடக்கில் ஆயிரம் ஏக்கர் காணிகள் மீள  ஒப்படைக்கப்படும் நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர்  ஆகியோர்   பங்கேற்றிருந்தனர்.

காணாமல் போனோர் விவகாரம், மற்றும் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பிலும் துரித நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது. ஜனாதிபதியின் ஓராண்டு பதவி நிறைவு  நிகழ்வில்  தன்னை கொல்லவந்ததாக குற்றம்சாட்டி   சிறைத்  தண்டனை அனுபவித்து வந்த  திலீபன்  ஜெனிகனுக்கு  ஜனாதிபதி  பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்திருந்தார்.  அதேபோல்  சகல அரசியல் கைதிகளுக்கும்  பொதுமன்னிப்பு அளித்து  விடுவிக்கவேண்டும் என்று தமிழ் மக்கள்  எதிர்பார்க்கின்றனர்.

தற்போது அரசியல் யாப்பினை மாற்றியமைப்பதற்கான   செயற்பாடுகள்  இடம்பெற்று வருகின்றன.  இதன் மூலம்  நிலையான  அரசியல் தீர்வொன்றினை  காணவேண்டியது அவசியமானதாகும்.  எமது நாட்டில்  மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள்  தீர்வைக் காண முயல்வதும் அதனை எதிர்க்கட்சி  எதிர்ப்பதுமே வரலாறாக  இருந்து வருகின்றது. தற்போது எமது ஐக்கிய தேசியக் கட்சியும்,  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும்  இணைந்து   நல்லாட்சியினை  நடத்தி வருகின்றன.  தமிழ் தேசியக் கூட்டமைப்பு  எதிர்க்கட்சியாக  உருவெடுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக  சம்பந்தன் பதவி வகித்து வருகின்றார்.  பிரதான இரு கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்துள்ள நிலையில் தமிழ் மக்களின்  அதிகூடிய ஆதரவைப் பெற்ற   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக  பதவி வகிக்கின்றது. இந்த சூழலானது அரசியல் தீர்வைக் காண்பதற்கான நல்லதொரு அரிய சந்தர்ப்பமாக  அமைந்துள்ளது.

எனவே இந்த சந்தர்ப்பத்தை நாம் அனைவரும் பயன்படுத்தி  அரசியல் தீர்வை காண்பதற்கு  முன்வரவேண்டும்.  இந்த விடயத்தில் முரண்பாடுகளை வளர்க்காது  நல்லிணக்கத்தை  வளர்த்து அரசியல் தீர்வைக்காண   நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும், இன்றைய தேசிய  பொங்கல் விழாவில்   தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காண்போம் என நாம் அனைவரும் உறுதி பூணவேண்டும்.

அடுத்த வருடம் நாம் பொங்கல் விழாவை கொண்டாடும்போது தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண்பதற்கான சக்தியை இறைவன் வழங்க வேண்டும் என நாம் அனைவரும் பிரார்த்திப்போம் என்று கூறினார்.