யாழ்ப்பாண ஏமாளி முதலாளிகளிடம் பல கோடிகள் சுருட்ட ஆயத்தமாகும் புலம்பெயர் கேடிகள்

 விடுதலைப்புலிகளின் பெருமளவு பணம் தங்களிடம் காசோலையாக உள்ளது என்றும் அதனைச் சட்டப்படி தங்களால் மாற்ற முடியாது உள்ளது, அதனால் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நீங்கள் அவற்றை மாற்றி விட்டு எங்களுக்கு 50 வீதத்தைத் தந்தால் போதும் என கூறி பல கோடி ரூபாக்களை பல நாடுகளில் உள்ள பேராசை மிக்க புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து சுருட்டி அவர்களை நடுத்தெருவில் விட்ட கும்பல் ஒன்று தற்போது கொழும்பு வந்துள்ளது. 

இந்தக் கும்பலின் தலைவனாக சாள்ஸ் என்பவன் தொழிற்பட்டு வருகின்றான். நோர்வே மற்றும் லண்டன் போன்ற இடங்களில் உள்ள தமிழர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி அவர்களிடம் ‘உங்களுக்கு நான் அந்தக் காசோலையைத் தருகின்றேன், ஆனால் அதற்கு முதல் உங்களை நான் நம்ப வேண்டும். அதற்காக நீங்கள் எனக்கு ஒரு தொகை பணம் தரவேண்டும்‘ என கூறிவிட்டு அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கி விட்டு அவர்களிடம் போலிக் காசோலையைக் கொடுத்து விட்டு ஏமாற்றி அவர்களை நடுத்தெருவில் விட்டுள்ளான். 

இவன் நோர்வையில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிக்கு 16 மெய்பாதுகாவலர்களுடன் சினிமாப் பாணியில் வந்திருந்து அங்குள்ள பேராசைக்கார தமிழர்களையும் ஏமாற்றி அவர்களிடம் இருந்தும் பெருமளவு பணத்தைச் சுருட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இவனது ஆடம்பரத்தையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்த்து பல தமிழர்கள் இவன் முக்கிய புள்ளி என ஏமாந்தே தமது பணத்தை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சுவிஸ்லாந்திலும் இவன் பலரை இவ்வாறு ஏமாற்றியுள்ளான். ஜேர்மனியைச் சேர்ந்த சாள்ஸ் தற்போது கொழும்பில் முகாமிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வர்த்தகர்கள், புடவைக்கடை உரிமையாளர்கள், நகைகடை உரிமையாளர்கள் போன்றவர்களுடன் இவன் தற்போது தொடர்பு பட்டு அவர்களையும் புலிகளின் பணம் என றீல் விட்டு ஏமாற்ற முயல்வதாக இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏற்கனவே பல ஏமாற்றுப் பேர்வழிகளிடம் சிக்கிச் சீரழிந்தும் சீட்டுப் பிடித்து ஏமாந்தும் அறா வட்டி வாங்கி அறுந்து போயுமுள்ள வர்த்தகர்கள் பலருக்கு இவ்வாறான மோசடிப் பேர்வழிகளின் செயற்பாடுகள் பற்றி நாம் தெளிவாகத் தெரிவித்துள்ளோம். இதனை நீங்கள் கருத்தில் எடுத்துச் செயற்பட்டால் உங்கள் வாழும் வளமானதாக மாறும். 

இந்த பணக்கட்டைக் காட்டியே நோர்வையில் உள்ள ஏமாளியான பேராசைக்காரர்களான புலம்பெயர் தமிழர்களிடம் 3 நாட்களில் 16 கோடி ரூபா சுருட்டினான் சாள்ஸ்