வடக்கின் அபிவிருத்திக்காக காலத்தை வீணடிக்காமல் செயற்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா

வடக்கின் அபிவிருத்தி செயற்பாடுகளில் தற்போது முடங்கிப் போனதொரு நிலையே காணப்படுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எனவே, அது பற்றி நடத்திய ஆய்வுகள் குறித்தும், நடத்தப்படக்கூடிய ஆய்வுகள் குறித்தும் ஆராய்ந்து காலத்தை வீண்விரயமாக்காது, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரம் அரசு முன்னெடுக்கக்கூடிய அபிவிருத்திப் பணிகளை வடக்கில் நடைமுறைப்படுத்தவும், நடைமுறைப்படுத்த வேண்டிய பணிகள் குறித்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அவற்றைப் பெற்று செயற்படுத்தவும் இந்த அரசைக் கொண்டுவந்ததாகக் கூறும் மக்கள் பிரதிநிதிகள் முன்வர வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த கால அரசுகளின் மூலமாக வடக்கின் தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

எனினும், போதியளவு அபிவிருத்திப் பணிகள் எங்களால் மேற்கொள்ளப்பட்டதை எவராலும் மறுக்க முடியாது. ஆனால், தற்போதைய நிலையைப் பார்க்கும்போது, வடக்கின் அபிவிருத்திப் பணிகள் முடங்கியதொரு நிலையே காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை இல்லாதொழிக்க வேண்டும். இந்த அரசைக் கொண்டு வந்தவர்கள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் சில தமிழ்த் தலைமைகள் தங்களுக்குள் முரண்பட்டு, வெறும் அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார்களே தவிர, வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் இன்னமும் சிந்தித்து செயற்படுவதாக இல்லை என கூறியுள்ளார்.

அத்துடன், மேடைகளிலும், ஊடகங்களிலும் வடக்கின் அபிவிருத்தி பற்றி பேசுவதால் மாத்திரம் வடக்கில் அபிவிருத்திப் பணிகள் நிகழ்ந்துவிடப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றை இந்த அரசுடன் இணைந்து எவ்வாறு செயற்படுத்த வேண்டும் என்ற ஆளுமை இருக்க வேண்டும். எனவே, இது பற்றிய ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் இறங்க அரசுடன் இணக்க அரசியல் நடத்தும் தமிழ்த் தலைமைகள் முன்வர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.