தோட்ட மக்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் நிரந்தரத் தீர்வு! பிரதமர் உறுதி

தோட்டப் பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்களுக்கு மலசலகூட வசதிகள் கிடையாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள தோட்டப் பகுதி மக்களுக்கு நிரந்தரமான வீடு, நிரந்தரமான காணி உள்ளிட்ட பல சலுகைகளை எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவேற்றி தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோட்டப் பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட ஐந்தாண்டு திட்டத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்திஜீவிகள், சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிலையத்தின் பங்களிப்புடன் இந்த அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.