ஆண் பால்! பெண் பால்! சி.வி.கே விற்ற பால்!

உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக பாலின் கொள்வனவு விலையை 72 ரூபாக உயர்த்த வடமாகாண சபை முடிவெடுத்துள்ளதாக அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையில் இன்றைய தினம் நடைபெற்ற 101 ஆவது அமர்வில் உரையாற்றும் போதே அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் பால் உற்பத்தியை ஊக்குவிக்கவும், உள்ளூர் பால் உற்பத்தி உள்ளூர் மக்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் யாழ். கோவின் பால் கொள்வனவு விலையை 72 ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் விற்பனை விலையில் மாற்றம் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது முன்னாள் விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் கொள்வனவின் போது, பாலின் அடர்த்தியை மானி ஊடாக பரிசோதித்தே கொள்வனவு செய்ய வேண்டும் என்றும் குறித்த அடர்த்தி இருந்தால் மாத்திரமே கொள்வனவு விலை 72 ரூபாவாக நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த அவைத்தலைவர் தான் பாடசாலை கல்வியை முடித்த கையோடு, 14 மாதங்கள் பால் விற்பனை செய்ததாகவும் அப்போதே பாலின் அடர்த்தி பரிசோதித்தே பாலினை கொள்வனவு செய்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாலின் அடர்த்தியை பரிசோதிக்க வேண்டியது பாலினை கொள்வனவு செய்பவரின் கடமை என்றும் பாலுக்கு கொள்வனவு விலை 72 ரூபாய் அடர்த்தி குறைந்தால் அது பாலில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.