வித்தியா படுகொலையில் முக்கிய விசாரணை அதிகாரியைக் கொல்வதற்கான சதி அம்பலம்!

வித்தியா கொலை வழக்கு உடபட முக்கியமான குற்ற வழக்குகளை விசாரித்து வரும் குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியான நிஷாந்த சில்வாவை கொலை செய்யும் திட்டமொன்று இருந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இந்த தகவல் வித்தியா கொலை வழக்கின் சாட்சியாளர் ஒருவரின்மூலமே கசிந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சிறப்பு விசாரணைகளை முன்னெடுக்க கோட்டை நீதிவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் வைத்து 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இவரைக் கொலை செய்வதற்கு சிறைச்சாலையில் வைத்து இரகசிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட 11 பேரும் திருகோணமலையில் உள்ள இரகசிய வதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப்புலனாய்வு பிரிவினர் கண்டுப்பிடித்துள்ளனர்.

இதன்மூலம் படைத்தரப்பை சார்ந்த பலர் குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ட்ரியல் அட் பார் முறையில் நடந்துவரும் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் சாட்சியாளராக இருக்கும் ஒருவர் மூலமாக இந்த கொலைச் சதி தெரியவந்துள்ளது.

வெள்ளவத்தை பகுதியில் வசிக்கும் குறித்த சாட்சியாளருக்கு அறிவித்தல் கொடுக்க சென்ற போதே இது நிஷாந்த சில்வாக்கு தெரியவந்து தற்போது நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவியின் வழக்கு தொடர்பான சாட்சியாளர் வேறொரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில். சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் குறித்த 11 பேர் கடத்தல் சம்பவத்தின் சந்தேகநபர்களில் ஒருவரான நலின் பிரசன்ன விக்ரமசூரிய, பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவை கொலை செய்ய திட்டம் தீட்டியமை தொடர்பில் குறித்த சாட்சியாளர் அறிந்துகொண்டுள்ளார் என நேற்றைய தினம் கோட்டை நீதவானுக்கு கையளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் பிரகாரம், பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, வித்தியா கொலை வழக்கு சாட்சிக்கான அறிவித்தலை கையளிக்க சென்ற போது, குறித்த சாட்சியாளர் நீங்களா நிசாந்த சில்வா என கேட்டுள்ளார். அதற்கு நிசாந்த சில்வா ஆம் என பதிலளித்துள்ளார்.

இதனையடுத்து தனியாகவா வந்துள்ளீர்கள் என அந்த சாட்சியாளர் கேட்டுள்ளார். அதற்கும் பொலிஸ் பரிசோதகர் ஆம் என பதில் கூறியுள்ளார்.

இதன் பின்னர் குறித்த கொலைச்சதி தொடர்பிலான தகவல்களை நிசாந்த சில்வாவுக்கு அந்த சாட்சியாளர் தெரிவித்துள்ளதுடன், அது தொடர்பான வாக்குமூலமொன்றையும் வழங்கியுள்ளார்.

சிறைச்சாலை வைத்திசாலையில் வைத்து விக்ரமசூரிய எனும் கடற்படை சந்தேகநபர் பொலிஸ் அதிகாரி நிசாந்த சில்வாவை கொலை செய்யும் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாக வித்தியா கொலை வழக்கின் குறித்த சாட்சியாளர் வழங்கியுள்ள வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement

"நாங்கள் நான்கைந்துபேர் மாட்டிக்கொண்டோம். எங்களின் மற்றையவர்கள் வெளியே இருக்கின்றனர்.

பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா இருக்கும் வரையில் நாம் தப்பிக்க முடியாது. வெளியில் உள்ளவர்களிடம் சொல்லி நிசாந்தவுக்கு வேலையை காட்ட வேண்டியதுதான்" என விக்ரமசூரிய கூறியதாக வித்தியா கொலை வழக்கின் சாட்சியாளர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள கோட்டை நீதிவான் லங்க ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.