யாழ்.நகரில் நடைபாதை கடைகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தவு

யாழ்.நகரில் மத்திய பேருந்து நிலையத்தின் பின்புற வீதியில் யாழ்.மாநகர சபையினால் வழங்கப்ப ட்ட 9 நடைபாதை கடைகளை அகற்றுமாறு நீதிமன்றம் பணித்திருக்கும் நிலையில் மேற்படி கடைகளை நடத்திய வர்த்தகர்கள் கவலையடைந்திருக்கின்றனர்.

யாழ்.மாநகர சபை ஈ.பி.டி.பி கட்சியின் ஆட்சியில் இருந்தபோது மேற்படி நடைபாதை கடைகள் முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் யாழ்.மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோரினால் சிறு வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் மேற்படிநடை பாதை கடைகள் அமைந்துள்ள பகுதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறி மேற்படி வர்த்தகர்கள் 1 மணி நேர கால அவகாசத்தில் அங்கிருந்து அகலுமாறு பணிக்கப்பட்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக வர்த்தகர்கள் கூறுகையில்,

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோரினால் இந்த நடைபாதை கடைகள் எமக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நடைபாதை கடைகளை நாங்கள் கடைகளாக மாற்றி பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் அதனுள் போட்டிருக்கின்றோம்.

இந்நிலையில் இன்று காலை நீதிமன்றத்தில் இருந்து வந்தவர்கள் 1மணி நேர அவகாசத்தில் வெளியேறுமாறும் இந்த காணி வைத்தியசாலைக்கு கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இந்நிலையில் நாங்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றோம். இந்த கடைகளை நம்பி வங்கிகளில் கடன்களை கூட பெற்றிருக்கின்றோம்.

இவ்வாறான நிலையில் எங்களை நடு தெருவில் விட்டதுபோல் மாற்று இடங்கள் கூட வழங்கப்படாமல் பொருட்களை எடுத்து கொண்டு செல்லுங்கள் என கூறுவது அநியாயம் இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள் கூறுகின்றனர்.