யாழ் பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்கு அருகில் பேய் சுற்றித்திரியாதா?

மயானத்துக்கு அருகில் அண்மையில் அமைக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழகத்துக்குரிய பெண்கள் விடுதிக்கான அனுமதி, கட்டடம் அமைக்கப்பட்ட பின்பே பெறப்பட்டது என நல்லூர் பிரதேச சபை தெரிவித்தது” என வட மாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையின் அமர்வு, கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (10) இடம்பெற்றது.

அதில், புத்தூர் மயானப் பிரச்சினையில் தலையீடு செய்வதில்லை என வட மாகாண சபை முறைப்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த போதே தவராசா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குடியிருப்புக்களுக்கு மத்தியில் மயானங்கள் அமைக்கப்படவில்லை. மயானங்களுக்கு அருகில் குடியிருப்புக்கள் தான் அமைக்கப்பட்டன. கொக்குவில் மயானமும் குடியிருப்புக்களுக்கு மத்தியில் தான் உள்ளது. அந்த மயானத்துக்கு அருகில் தான் யாழ். பல்கலைக்கழகத்துக்குரிய பெண்கள் விடுதி அண்மையில் அமைக்கப்பட்டது. இதனால், அந்த மயானத்தை அதிலிருந்து அகற்ற வேண்டும் எனக் கோர முடியாது. ஏனெனில், விடுதி இப்போது தான் அமைக்கப்பட்டது. ஆனால், மயானம் பல காலமாக அதில் உள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்துக்குரிய பெண்கள் விடுதி அமைக்கப்பட்டமை தொடர்பாக நல்லூர் பிரதேச சபையை நான் தொடர்பு கொண்டு கேட்டேன். அதற்கு, பிரதேச சபைக்கு அது தொடர்பாக தெரியாது. கட்டடம் அமைக்கப்பட்ட பின்பே பிரதேச சபையின் அனுமதி பெறப்பட்டது எனத் தெரிவித்தனர். இது தொடர்பாக உண்மைத்தன்மை தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.