கைதான ஆவா குழு சந்தேகநபர்களிடம் தீவிர விசாரணை!

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்றுக் கைதுசெய்யப்பட்ட ‘ஆவா’ குழுவினரின் பிரதி தலைவர் உட்பட 6 பேரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை தடுத்து வைத்து 48 மணிநேர விசாரணையை முன்னெடுக்குமாறு யாழ். பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கமைய சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவா குழுவின் பிரதித்தலைவர் நிசாந்தன் உள்ளிட்ட மூவர் புறக்கோட்டை பஸ் நிலையத்தில் வைத்து நேற்று காலை குற்றவிசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

அண்மையில் கோப்பாய் பிரதேசத்தில் இரு பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் விக்டர் நிசா எனப்படும் நிசாந்தன் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் மேலுமொரு சந்தேகநபர் நேற்று முன்தினம் இரவு மட்டக்குளி பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். ஏனைய இரண்டு சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டிருந்தது.