கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று! - அரசியல் கைதிகள் குறித்து முக்கிய பேச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்திருந்தனர். இந்தக் குழுவின் கூட்டம் கடந்த மாதம் மூன்றாம் வாரத்தில் இடம்பெற்றிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே இன்றைய கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், மீள்குடியமர்வு, அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையிலான உட்கட்சி விவகாரங்களும் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.