பருத்தித்துறை தெருமூடி மடம்

நான் சிறுவனாக இருந்த காலத்தில் இது போன்ற மற்றொரு மடம் மந்திகையில் கண்டிருக்கிறேன். போதிய பராமரிப்பு இன்றியும் வீதி அகலிப்பு என்ற போர்வையிலும் அது இருந்த இடம் தெரியாது மறைந்து விட்டது.

எமது கலாசார பண்பாட்டு சின்னமும் கட்டிடக் கலையின் அடையாளமுமான அதை அழிய விட்டு விட்டோம்.

முற் காலத்தில் பருத்தித்துறைக்கு அப்பால் உள்ள "பிரதேச மக்கள் தமது தேவைகளை நிறை வேற்றிக் கொள்ள பருத்தித்துறை மத்திய பகுதிக்கு வருகை தந்தனர். இம் மக்கள் இளைப்பாறுவதற்கென்று ஒர் தனியான இடம் இருக்கவில்லை.

இந்நிலையையும் கால் நடைப்பயணங்கள், வண்டிப்பாரங்கள், இராப்பயணங்கள், சிற்றூண்டி விடுதி, திருடர் தொல்லை, குறித்த நேர பிரயாணத்தடங்கல், பேய் பிசாசு மூடக் கொள்கைகள், திருத்தல யாத்திரைகள் என்பனவற்றின் தேவையை உணர்த்த மக்கள் பருத்தித்துறை தெரு மூடி மடத்தை உருப்பெறச் செய்தார்கள்.

இந்தத் தெரு மூடி மடம் 150 வருடங்கள் பழைமை வாய்ந்தவையாகும். 

இதன் கட்டடக்கலை திராவிடக் கலைப்பாணியில் அமைந்துள்ளது. வெண் வைரச் சுண்ணக்கல்லினால் உருவாக்கப்பட்ட தூண்கள் அதன் கபோதங்கள் மற்றும் தளம் ஆகிய சிறந்த கொத்து வேலைப்பாடுகளை கொண்டிருக்கின்றன. 

இங்கு 16 தூண்கள் காணப்படுகின்றன. இவற்றுள் ஆறு தூண்களில் தமிழ் வரிவடிவில் சாசனங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

இத்தெரு மூடி மடத்தினது மேற் கூரையானது தூண்களின் கபோதத்திலிருந்து இருபக்கங்களிலும் சமாந்தரமாக மேலெழுப்பட்டுள்ள ஒர் அரைச்சுவரின் மீது அமைக்கப்பட்ட விட்டத்துடன் கூடிய ஒரு சட்டகக் கோப்பினால் தாங்கப்பட்டுள்ளது. 

இத்தெரு மூடி மடத்தினூடான போக்குவரத்து நடைமுறைகளுக்கு கூரை எந்த வித தடையாக அமையவில்லை. 150 வருடங்களுக்கு முன்னர் இது கட்டப்பட்டாலும் எதிர்கால நிகழ்வுகளின் சிந்தனையிலிருந்தும் எமது முன்னோர்கள் தவறவில்லை என்பதை உண்மையாகவே உணர முடிகின்றது."